பாமகவில் இருந்து அன்புமணியை நீக்கம் செய்து அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அதிரடி!!
விழுப்புரம் : பாமகவில் இருந்து அன்புமணியை நீக்கம் செய்து அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். தைலாபுரத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "கட்சி விரோத நடவடிக்கை உள்பட 16 குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி பதில் அளிக்க வழங்கிய அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. தன் மீதான 16 குற்றச்சாட்டுகளுக்கு இருமுறை அவகாசம் அளித்தும் அன்புமணி பதில் அளிக்கவில்லை. பதில் அளிக்காததால் அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஏற்றுக்கொண்டதாக கருதப்படும். அன்புமணி மீதான அனைத்து குற்றச்சாட்டுகள் உண்மையானது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாமக தொடங்கியதில் இருந்து இதுவரை எவரும் செய்யாத கட்சி விரோத நடவடிக்கையில் அன்புமணி ஈடுபட்டுள்ளார். அரசியல்வாதி என்பதற்கு தகுதியற்றவர் அன்புமணி. ஆகவே பாமக செயல்தலைவர் உட்பட அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்புமணி நீக்கம் செய்கிறோம். அன்புமணியுடன் பாமகவைச் சேர்ந்த யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது. அன்புமணியுடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் பாமகவினரும் கட்சியில் இருந்து நீக்கப்படுவர். அன்புமணி தனது தலைமையில் தனி அணி செயல்படுவதுபோல் செயல்பட்டுள்ளார்.
அன்புமணியுடன் சேர்ந்து செயல்பட்டவர்கள் திருந்த வாய்ப்பு கொடுத்து அவர்களை மீண்டும் பாமகவில் சேர்க்க தயாராக இருக்கிறோம். அன்புமணியுடன் 10-15 பேர் மட்டுமே இருக்கின்றனர். நான் இல்லாமல் அன்புமணி மற்றும் அவருடன் இருப்பவர்கள் இந்த |நிலைமைக்கு வளர்ந்திருக்க முடியாது. அப்பா சொல்வதை கேளுங்கள் என்று மூத்தவர்கள் அறிவுரை கூறியும் அன்புமணி கேட்கவில்லை. இன்று முதல் எனது பெயரை அன்புமணி பயன்படுத்தக் கூடாது. இரா என்ற இனிஷியல் தவிர, ராமதாஸ் என்ற பெயரை அன்புமணி பயன்படுத்தக்கூடாது. அன்புமணி தனிக் கட்சி தொடங்கி கொள்ளலாம் என ஒரு வருடத்துக்கு முன்பே சொல்லிவிட்டேன்.
விரும்பினால் தனிக்கட்சி தொடங்கிக் கொள்ளலாம் என்று அன்புமணியிடம் 3 முறை சொல்லியுள்ளேன். ராமதாஸ் என்ற தனி மனிதர் ஆரம்பித்த கட்சி பாமக ; இதற்கு உரிமை கோர எனது மகன் உள்பட யாருக்கும் உரிமையில்லை. பாமகவில் இருந்து அன்புமணியை நீக்கியது களையெடுப்பு போன்றது. அன்புமணி தனிக் கட்சி தொடங்கினாலும் வளராது என்பதை உடன் இருப்பவர்கள் உணர வேண்டும். அன்புமணி பொய் என்பது அண்ட புழு, ஆகாச புழு என்பது எல்லாம் விட மோசமானது. அன்புமணி செயலால் இரும்பு போன்ற என் இதயம் நொறுங்கியே விட்டது. அரும்பாடு பட்டு வளர்ந்த கட்சி அன்புமணியால் அழிகிறது,"இவ்வாறு தெரிவித்தார்.