மூத்த குடிமக்களின் நல்வாழ்விற்காக ஓசூரில் அன்புச்சோலை திட்டம் துவக்கம்
*காணொலி மூலம் முதல்வர் துவக்கி வைத்தார்
ஓசூர் : ஓசூரில் மூத்த குடிமக்களின் நல்வாழ்வை உறுதி செய்யும் வகையில், அன்புச்சோலை திட்டத்தினை காணொலி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
மூத்த குடிமக்களின் நல்வாழ்வை உறுதி செய்யும் வகையில், தமிழகத்தில் அன்புச் சோலை திட்டத்தினை, நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
திருச்சியில் நடைபெற்ற விழாவில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ், 10 மாநகராட்சிகளில் தலா 2 மையங்கள் மற்றும் தொழில் மாவட்டங்களான கிருஷ்ணகிரி உள்ளிட்ட 25 இடங்களில், ரூ.10 கோடி மதிப்பிலான அன்புச்சோலை மையங்களை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, ஓசூர் மாநகராட்சி பகுதியில், தர்கா அருகில் உள்ள நகர்ப்புற வாழ்வாதார இயக்க கட்டிடத்தில், ஆராதனா தொண்டு நிறுவனத்தின் மூலம் நடத்தப்பட உள்ள அன்புச்சோலை மையத்தினை, கலெக்டர் தினேஷ்குமார், பிரகாஷ் எம்எல்ஏ, மேயர் சத்யா ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, முதியோர்களுக்கு சால்வை அணிவித்து, பரிசு பொருட்களை வழங்கினர்.
இதுகுறித்து கலெக்டர் தினேஷ்குமார் கூறியதாவது: மூத்த குடிமக்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வை உறுதிப்படுத்தும் வகையில், தமிழக முதல்வரால் மாநகராட்சிகள், தொழில் மாவட்டங்கள் என மொத்தம் 25 இடங்களில் அன்புச்சோலை மையங்கள் துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொழுதுப்போக்கு அம்சங்கள், யோகா, நூலகம் மற்றும் இயன்முறை மருத்துவ சேவைகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தர்கா அருகில் உள்ள நகர்ப்புற வாழ்வாதார இயக்க கட்டிடத்தில், ஆராதனா தொண்டு நிறுவனத்தின் மூலம் நடத்தப்பட உள்ள அன்புச்சோலை மையம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் செயல்படும் இந்த மையத்தில், பகல்நேர பராமரிப்பு உதவி, அத்தியாவசிய மருத்துவ பராமரிப்புகள், பொழுதுபோக்கு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மூலம் மேற்கொள்ளப்படும்.
இந்த திட்டத்தின் மூலம், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பயனடைவார்கள். ஒவ்வொரு அன்புச்சோலையிலிருந்தும், குறைந்தது 50 முதியவர்கள் பயனடைவார்கள். பகல் நேரத்தில் முதியவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் ஆதரவான சூழல் உறுதி செய்யப்படும். மூத்த குடிமக்கள் தங்கள் வயதினருடன் ஒன்றிணைவதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது.
பகல் நேரத்தில் தனிமையில் அவதிப்படும் முதியவர்களுக்கு அறுதல் அளிக்கவும், மூத்த குடிமக்களிடையே சமூக தொடர்புக்கான சூழலை உருவாக்கவும், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் முதன்மை பராமரிப்பாளர்களுக்கு மன அமைதியை வழங்க, அவர்களின் அன்புக்குரியவர்கள் நன்கு பராமரிக்கப்படுகிறார்கள் என்பதை உறுதி செய்யப்படும்.
மேலும், குறிப்பிட்ட நாளில் மையத்திற்கு வருகை தரும் முதியவர்களுக்கு, மதிய உணவு மற்றும் சிற்றுண்டிகளை இந்த மையம் வழங்கும். விரிவான பராமரிப்பை உறுதி செய்வதற்காக, தகுதி வாய்ந்த பராமரிப்பாளர்கள், சமூக சேவையாளர்கள் மற்றும் உடல் சிகிச்சையாளர்கள் பணியமர்த்தப்படுவர். முதியோர்களுக்கான சுகாதார பரிசோதனைகளுக்கு, அருகிலுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களின் சேவைகள் பயன்படுத்தப்படும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார். பின்னர், அன்புச்சோலை மையத்தில் உள்ள தங்கும் அறைகள், சமையலறை ஆகியவற்றையும், பொழுதுபோக்கு அம்சங்களையும், நவீன பிசியோதெரபி உபகரணங்களையும் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில், ஓசூர் சப்கலெக்டர் ஆக்ரிதி சேத்தி, துணை மேயர் ஆனந்தய்யா, மாவட்ட சமூகநல அலுவலர் சக்தி சுபாஷனி, மண்டலக்குழு தலைவர்கள் மாதேஸ்வரன், ரவி, தாசில்தார் குணசிவா, ஆராதனா தொண்டு நிறுவன நிர்வாகி ராதா மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மண்பாண்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில், கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத்தின் மாவட்ட தலைவர் மணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். தமிழக அரசு பொங்கல் திருநாளில் வேட்டி, சேலை வழங்குவது போல புது பானை, மண் அடுப்பு ஆகியவற்றை வழங்க வேண்டும். பருவமழை காலங்களில் மண்பாண்ட தொழிலாளர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.
நலவாரியத்தில் பதிவு செய்துள்ளவர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும், மண்பாண்ட தொழிலை பாடப்பிரிவாக கொண்டுவர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதைத்தொடர்ந்து, தங்கள் கோரிக்கை மனுவை கலெக்டர் அலுவலகத்தில் அளித்தனர்.