ஆனந்தம் பாளையம் ஊராட்சி பட்டாசு பாளியில் குடிநீர் தட்டுப்பாடு
மொடக்குறிச்சி : ஆனந்தம் பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பட்டாசு பாளியில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் குடிநீர் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக குடிநீர் இணைப்பு வழங்காததால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.மொடக்குறிச்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஆனந்தம் பாளையம் ஊராட்சியில் உள்ள பட்டாசு பாளியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 2022- 2023ம் ஆண்டு வீடுகளுக்கு நேரடியாக குடிநீர் வழங்குவதற்காக ரூ.12.93 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் வழங்கும் பணிக்காக குடிநீர் இணைப்புகள் வீடுகளுக்கு வழங்கப்பட்டது.
இதற்காக அப்பகுதியில் இரண்டு மேல்நிலை குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டது. ஆனால், இதுவரை குடிநீர் வீடுகளுக்கு வழங்காமல் இருந்து வருகின்றனர். மேலும் காவிரி ஆற்றில் இருந்து, கொண்டு வரப்படும் குடிநீர் பட்டாசு பாளியில் கட்டப்பட்டுள்ள இரண்டு மேல்நிலைப்தொட்டிகளுக்கும் மேலே கொண்டு செல்ல இணைப்பு வழங்கப்படவில்லை.
இதனால், இத்திட்டத்தின் மூலம் வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டும் இதுவரை ஆற்று நீர் செல்லவில்லை. இதனால், அப்பகுதி மக்கள் குடிநீர் இல்லாமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு நேரடியாக குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் கடந்த 2023-ம் ஆண்டு குடிநீர் வரியாக ரூ.1100 ரூபாய் கட்டணமும் பெறப்பட்டு அதற்குண்டான ரசீதும் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஒவ்வொரு இணைப்புகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள 2000 லிட்டர் கொள்ளளவு கொண்ட சின்டெக்ஸ் டேங்க் மூலம் மட்டுமே 150 குடும்பங்களுக்கும் தண்ணீர் பிடித்து வருகின்றனர். இதுகுறித்து பல முறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘நாங்கள் தினசரி காலையில் வேலைக்கு செல்வதால் தண்ணீர் பிடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும், எங்கள் ஊரில் திருமணம் மற்றும் இதர நிகழ்ச்சிகள் நடைபெற்றால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. எனவே ஜல்ஜீவன் மிஷின் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும்’’ என்றனர்.