ஆனைமலை விற்பனை கூடத்தில் ரூ.30.80 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்
பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று கொப்பரை ஏலம் நடந்தது. ஏலத்திற்கு ஆனைமலை, கோட்டூர், வேட்டைக்காரன்புதூர், ஒடையக்குளம், சமத்தூர், அம்பாரம்பாளையம், பொள்ளாச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 78 விவசாயிகள் மொத்தம் 385 கொப்பரை மூட்டைகளை கொண்டு வந்தனர்.
அவை தரம் பிரித்து ஏலம் விடப்பட்டது. இதில் முதல் தரம் 128 மூட்டை கொப்பரை ரூ.241 முதல் ரூ.245.25 வரையிலும். 254 மூட்டை 2ம் தர கொப்பரை ரூ.180 முதல் ரூ.218 வரையிலும் என 171 குவிண்டால் கொப்பரை மொத்தம் ரூ.30.80 லட்சத்துக்கு ஏலம் போனது.
கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில் பரவலாக ெபய்த மழையால், கொப்பரை உலர வைக்கும் பணி தடைப்பட்டது. இதனால் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு விவசாயிகள் கொண்டு வரும் கொப்பரை அளவு மிகவும் குறைவானது என, ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.