ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு… முதல் குற்றவாளி ரவுடி நாகேந்திரன் கல்லீரல் பாதிப்பு காரணமாக மரணம்!
சென்னை: ரவுடி நாகேந்திரன் கல்லீரல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை திடீரென்று மரணம் அடைந்தார். இதனை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி நாகேந்திரன். அதிமுக பிரமுகர் ஸ்டான்லி சண்முகம் கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தார் நாகேந்திரன். சிறையில் இருந்தபடியே பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு திட்டம் தீட்டியதாக நாகேந்திரன் A1 குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் கல்லீரல் பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதியளிக்க வேண்டும் என போலீசாரிடம் கோரிக்கை விடுத்து இருந்தார். போலீசார் அனுமதி மறுத்ததால், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்நிலையில் கடந்த வாரம் நாகேந்திரன் உடல்நிலை மோசமானதால் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். வெண்டிலேட்டர் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணமடைந்து விட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.ரவுடி நாகேந்திரேன் உயிரிழந்ததை அடுத்து வியாசர்பாடி பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.