அமிர்தா எக்ஸ்பிரஸ்சில் நிரம்பி வழியும் முன்பதிவில்லா பெட்டிகள்
*பரமக்குடி, மானாமதுரை பயணிகள் அவதி
மானாமதுரை : ராமேஸ்வரத்தில் இருந்து திருவனந்தபுரம் வரை செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவில்லா பெட்டிகள் அனைத்தும் பயணிகளால் நிரம்பி வழிந்தன. இதனால் பரமக்குடி, மானாமதுரை பயணிகளுக்கு நிற்க கூட இடமில்லாத நிலை ஏற்பட்டது.திருவனந்தபுரத்தில் இருந்து பாலக்காடு, பொள்ளாச்சி வழியாக மதுரைக்கு தினமும் அமிர்தா எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16343) இயக்கப்பட்டது.
இந்த ரயில் கடந்த அக்.17ம் தேதி முதல் ராமேஸ்வரத்திற்கு நீட்டிக்கப்பட்டது. திருவனந்தபுரத்தில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.45 மணிக்கு ராமேஸ்வரம் வந்து சேரும். மறுமார்க்கமாக (வண்டி எண்: 16344) ராமேஸ்வரத்தில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு ராமநாதபுரத்திற்கு 2.15 மணிக்கும், மானாமதுரைக்கு 3.05 மணிக்கும், மதுரைக்கு 4.05 மணிக்கும் செல்லும்.
இந்த ரயில் விடப்பட்ட நாள் முதல் கேரளாவில் இருந்து ஏர்வாடி, ராமேஸ்வரத்திற்கு ஏராளமான பக்தர்கள் வருவதால் முன்பதிவில்லாத பெட்டி கடந்த இருவாரங்களாக நிரம்பி காணப்படுகிறது.
நேற்று ராமேஸ்வரத்தில் நான்கு முன்பதிவில்லாத பெட்டிகளும் ஓரளவு நிரம்பி நிலையில் ராமநாதபுரம் வந்ததும் முழுமையாக நிரம்பியது. கழிப்பறை இடையே உள்ள சிறிய இடத்தில் கூட பயணிகள் முண்டியடித்து ஏறினர். பரமக்குடி, மானாமதுரையில் ஏறிய பயணிகளுக்கு நிற்க கூட இடமில்லாத நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து ரயில்பயணி ராஜசேகர் கூறுகையில், அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் மதுரையில் இருந்து காலை 9.45 மணிக்கு ராமேஸ்வரம் வருவதற்கும், ராமேஸ்வரத்தில் இருந்து மதியம் 1.30 மணிக்கு மதுரை செல்வதற்கும் வசதியான நேரத்தில் இயக்கப்படுவதால் பயணிகள் அனைவரும் இந்த ரயிலை பயன்படுத்துகின்றனர். இதனால் இந்த ரயிலில் முன்பதிவில்லாத பெட்டிகள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் பெட்டிகள் வரை நிரம்புகிறது, என்றார்.