கூட்டணியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வரலாம் அமித்ஷா-ஓபிஎஸ் சந்திப்பு; பற்றி எனக்கு தெரியாது: பச்சை கண்ணாடி போட்டுதான் பார்க்கணும் என நயினார் பேட்டி
நெல்லை: நெல்லையில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று அளித்த பேட்டி: திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீப திருவிழாவின்போது தீப தூணில் விளக்கு ஏற்றுவது பல ஆண்டுகளாக தொன்று தொட்டு நடந்து வருகிறது. திருப்பரங்குன்றத்தில் மலை யாருக்கு சொந்தம் என்ற பிரச்னை இருந்து வருகிறது. தீபம் ஏற்றலாம் என நீதிமன்ற உத்தரவு கிடைத்து விட்டது. அந்த தீபதூணில் தீபம் ஏற்றுவதற்காக இந்துக்கள், இந்து முன்னணியினர் கார்த்திகை தீபதினத்தில் வந்தனர்.
அப்போது, அங்கு போலீஸ் பாதுகாப்பு மற்றும் 144 தடை உத்தரவு அமல்படுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கலவரம் நடக்க வாய்ப்பில்லாத இடத்தில் 144 தடை உத்தரவு பிறக்க வேண்டிய தேவையில்லை. மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற இஸ்லாமிய அமைப்புகள் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.மலைத் தூணில் அமைக்கப்பட்டுள்ள தீப தூண், எல்லைக்கல் என்று கூறுவதை ஏற்க முடியாது. குன்று இருக்கும் இடமெல்லாம் குமரனேக்கு சொந்தம் என இங்கிலாந்து நீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது. அனைத்தையும் முருகன் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறான். இதுகுறித்து நல்ல தீர்ப்பு வரும். மலைமீது தீபம் ஏற்றப்படும்.
ஓபிஎஸ் டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த விவகாரம் குறித்து எனக்கு தெரியாது. இதனை பச்சை கண்ணாடி போட்டுத்தான் பார்க்க வேண்டும். அந்த சந்திப்பின்போது நான் அங்கு இல்லை. இதனால் இதுகுறித்து வேறு எந்த தகவலும் தெரியாது. எங்கள் கூட்டணியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வரலாம். அரசியலில் எது வேண்டுமென்றாலும் நிகழும்.
இவ்வாறு அவர் கூறினார்