உள்துறை அமைச்சர் அமித்ஷா வீட்டில் இருந்து முகத்தை மூடியபடி வர என்ன அவசியம்? - எடப்பாடிக்கு டிடிவி. தினகரன் கேள்வி
சென்னை :அண்ணன் பழனிசாமியை இன்று முதல் முகமூடியார் பழனிசாமி என்றுதான் அழைக்கணும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துவிட்டு வரும்போது முகத்தை கைக்குட்டையால் மூடிக்கொண்டு இபிஎஸ் வந்தது குறித்து டிடிவி தினகரன் இவ்வாறு விமர்சித்துள்ளார். நேற்று டெல்லியில் அமித் ஷாவை சந்தித்துவிட்டு வெளியே வந்த எடப்பாடி முகத்தை கர்சீப்பால் மூடியபடி வந்தார். எடப்பாடி பழனிசாமியுடன் காரில் இருந்து சென்னை தொழிலதிபரும் முகத்தை திருப்பிக் கொண்டார். அரசு வாகனத்தில் அமித் ஷா வீட்டுக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி, வெளியே வரும்போது வேறொருவரின் சொகுசு காரில் வந்தார். இதையடுத்து அமித்ஷாவை சந்தித்து பேசிய பழனிசாமி திரும்பி வரும்போது முகத்தை மறைத்தது விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்,"அமித் ஷாவை சந்தித்த எடப்பாடி முகத்தை மூடிகொண்டு வரவேண்டிய அவசியம் என்ன?. எங்களுக்கு தன்மானம்தான் முக்கியம் என பயங்கரமாக சவுண்ட் விட்டு வீரவசனம் பேசிய எடப்பாடி பழனிசாமி, நேற்று இரவு அமித்ஷாவை சந்தித்திருக்கிறார். இப்படியெல்லாம் பொய் சொல்லி யாரை ஏமாற்றப் பார்க்கிறீர்கள்?. பழனிசாமியிடம் தமிழ்நாட்டு மக்கள் இனி ஏமாற மாட்டார்கள். 2026 தேர்தலில் ஈபிஎஸ் தோல்வியைத் தழுவுவது உறுதி. அண்ணன் பழனிசாமியை இன்று முதல் முகமூடியார் பழனிசாமி என்றுதான் அழைக்க வேண்டும்.
பழனிசாமி அடிக்கும் கூத்துக்களை எல்லாம் ராஜதந்திரம் என கூறி கொண்டிருந்தனர். அதிமுக. தொண்டர்கள் இனிமேலும் தங்களை தாங்களே ஏமாற்றி கொள்ள வேண்டாம். இரட்டை இலையை வைத்துக்கொண்டு அ.தி.மு.க. தொண்டர்களை ஏமாற்றுகிறார். முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா என்ற கோரிக்கையில் தவறில்லை. தென்மாவட்ட மக்களை சரி செய்ய வேண்டும் என முயற்சி செய்கிறார் பழனிசாமி. ஆனால் அவர் நினைப்பது போல் தென் மாவட்ட மக்கள் முட்டாள்கள் இல்லை. "இவ்வாறு தெரிவித்தார்.