அக்னி போன்ற தேசபக்தி நிறைந்த கவிதைகளால் சுதந்திர வேட்கையை தூண்டியவர் பாரதியார் : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா மரியாதை!!
டெல்லி: அக்னி போன்ற தேசபக்தி நிறைந்த கவிதைகளால் சுதந்திர வேட்கையை தூண்டியவர் பாரதியார் என்று அவரது 143வது பிறந்த நாளையொட்டி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா புகழாரம் சூட்டியுள்ளார். பாட்டுக்கொரு புலவன் பாரதி. தம் கவித்துவ, புரட்சிகர எழுத்துகள் மூலமாக எண்ணற்ற மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டிய மகாகவி பாரதியின் பிறந்தநாள் இன்று. இதையொட்டி பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்த வரிசையில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தமிழில் வெளியிட்ட அறிக்கையில்," நவீன தமிழ் இலக்கியத்தின் சிற்பியான சுப்பிரமணிய பாரதியின் ஜெயந்தி தினத்தில் அவருக்கு வணக்கங்கள். காலனித்துவ அரசால் செய்யப்பட்ட அட்டூழியங்களை துணிந்து எதிர்த்தார். மகாகவி புரட்சியின் சுடரை ஏந்தி, தனது அக்னி போன்ற தேசபக்தி நிறைந்த கவிதைகளால் சுதந்திர வேட்கையை தூண்டினார்.
அதே நேரத்தில், சமூக சீர்திருத்தங்கள் மூலம் நியாயமான மற்றும் சமத்துவமான சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான இந்தியாவின் நாகரிக இலக்கை அவர் முன்னெடுத்தார். அவரது ஞானம் உத்வேகத்தின் நித்திய ஊற்றாக இருக்கும்", இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.