அமேதியில் தோற்றதால் ஓரங்கட்டப்பட்ட ஸ்மிருதி இரானி நடிக்கும் டிவி சீரியலில் பில் கேட்ஸ்
மும்பை: அமேதி தொகுதியில் தோற்றதால் ஓரங்கட்டப்பட்ட முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி நடிக்கும் பிரபல இந்தி தொலைக்காட்சி தொடரில் பில்கேட்ஸ் சிறப்பு தோற்றத்தில் தோன்றுகிறார். 2024ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் அமேதி தொகுதியில் தோற்ற முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி தற்போது மீண்டும் டிவி தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார். உலகப் பொருளாதார மாநாட்டில் பில் கேட்ஸை சந்தித்து பேசிய ஸ்மிருதி இரானி அப்போது பாலின சமத்துவம் குறித்து விவாதித்தார்.
அதை தொடர்ந்து ஸ்மிருதி இரானி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘கியூங்கி சாஸ் பி கபி பஹு தி 2’ என்ற இந்தி தொலைக்காட்சி தொடரில் பில் கேட்ஸ் ஒரு சிறப்பு காணொலி தோற்றத்தில் தோன்ற உள்ளார். இதை வரலாற்றுத் தருணம் என்று ஸ்மிருதி இரானி உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கு முன்பு அமெரிக்க நிகழ்ச்சியான ‘தி பிக் பேங் தியரியில்’ பில்கேட்ஸ் சிறப்புத் தோற்றத்தில் தோன்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.