அமெரிக்க சுற்றுலா பயணி போதையில் திடீர் ரகளை: போலீசில் ஒப்படைப்பு
சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் புறப்பாடு பகுதியில் விமான நிலைய மற்றும் விமான நிறுவன ஊழியர்கள் மட்டும் செல்வதற்கான கேட் எண் 5 உள்ளது. நேற்று முன்தினம் சனிக்கிழமை வெளிநாட்டைச் சேர்ந்த சுமார் 40 வயது ஆண் பயணி ஒருவர், அந்த கேட் வழியாக உள்ளே செல்ல முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், அவரை தடுத்து நிறுத்தி, இந்த வழியாக உள்ளே செல்லக்கூடாது என்று கூறினர்.
ஆனால், அந்த வெளிநாட்டு பயணி, இந்த வழியாகத்தான் செல்வேன் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு, மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை பிடித்து கீழே தள்ளிவிட்டு உள்ளே செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அதோடு அந்த நபர், அளவுக்கு அதிகமான போதையில் இருந்ததாகவும் தெரியவந்தது. இதையடுத்து மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர், அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்து, சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணையில், அந்த நபர் அமெரிக்க நாட்டை சேர்ந்தவர் என்றும், அவருடைய பெயர் டைட்டஸ் லிவி (43) என்றும் தெரியவந்தது. இவர் கடந்த ஒரு வாரத்துக்கு முன்னதாக சுற்றுலா பயணியாக, அமெரிக்காவில் இருந்து கத்தார் நாட்டு தலைநகர் தோகா வழியாக சென்னைக்கு வந்துள்ளார். அதன்பின்பு சென்னையில் இருந்து மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு சுற்றுலா பயணியாக சென்று விட்டு, மீண்டும் சென்னைக்கு திரும்பி வந்துள்ளார்.
சென்னையில், சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதி ஒன்றில், தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது. போதைக்கு அடிமையான இவர், விமான டிக்கெட் ஆவணங்களை தவற விட்டு விட்டதாக தெரிகிறது. இந்த நிலையில், அளவுக்கு அதிகமான போதையில் நேற்று முன்தினம் பகலில் சென்னை விமான நிலையத்திற்கு வந்து, உள்ளே நுழைய முயன்ற போது, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு போலீசார், அமெரிக்க பயணி டைட்டஸ் லிவியை, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று, போதையில் இருப்பதற்கான மருத்துவ சான்றிதழும் வாங்கி விட்டு மீண்டும் சென்னை விமான நிலைய காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். அதோடு சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கும், இதுகுறித்து போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.