அமெரிக்க வெளியுறவு உதவி செயலாளராக பால் கபூர் பதவியேற்றார்: இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்
வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பால் கபூர் தெற்காசிய மற்றும் மத்திய ஆசியாவுக்கான உதவி வெளியுறவு செயலாளராக பதவியேற்றார். அமெரிக்க வெளியுறவு உதவி வெளியுறவு செயலாளராக பதவியேற்றிருக்கும் கபூர் இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான்,பூடான்,கிர்கிஸ்தான், கஜகஸ்தான், மாலத்தீவுகள், தஜிக்கிஸ்தான், துர்க்மேனிஸ்தான், உஸ்பெக்கிஸ்தான் நாடுகளில் அமெரிக்காவின் தூதரக செயல்பாடுகள் மற்றும் மூலோபாய கூட்டாண்மைகளை மேற்பார்வையிடுவார்.
டெல்லியில் பிறந்த பால் கபூரின் தந்தை இந்தியர். தாய் அமெரிக்கர் ஆவார்.அவர் அமெரிக்க கடற்படை முதுகலை பள்ளியில் தேசிய பாதுகாப்பு விவகாரத் துறை பேராசிரியராகப் பணியாற்றினார். ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஹூவர் நிறுவனத்தில் சிறப்பு பேராசிரியராக பணிபுரிந்துள்ளார்.
கடந்த 2020-2021 வரை,வெளியுறவுத்துறையின் கொள்கை திட்டமிடல் பிரிவில் பணியாற்றினார். பால்கபூர் தெற்கு மற்றும் மத்திய ஆசியா, இந்தோ-பசிபிக் உத்தி மற்றும் அமெரிக்க-இந்திய உறவுகள் ஆகியவற்றில் நிபுணராக உள்ளார். தெற்காசியா மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சர்வதேச பாதுகாப்பு சூழல்,அணு ஆயுதப் பெருக்கம், தடுப்பு மற்றும் இஸ்லாமிய ஆயுத குழுக்கள் குறித்து பல புத்தகங்களை எழுதியுள்ளார்.