அமெரிக்க வம்சாவளி உட்பட 6 பணயக் கைதிகள் காசாவில் சடலமாக மீட்பு: இஸ்ரேல் பிரதமர் கண்டனம்
எஞ்சியவர்கள் ஹமாஸ் பிடியில் சிக்கி உள்ளனர். இவர்களை மீட்கும் பணியில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து ஈடுபட்டுள்ளது. தெற்கு காசாவில் உள்ள ரபாவில் கடந்த வாரம் கைத் பர்ஹான் (52) என்ற பணயக் கைதியை இஸ்ரேல் ராணுவம் உயிருடன் மீட்டது. அவர் மீட்கப்பட்ட பகுதியின் அருகிலேயே சுரங்கப்பாதையிலிருந்து ஒரு கிமீ தொலைவில் 6 பணயக் கைதிகள் சடலமாக நேற்று மீட்கப்பட்டுள்ளனர். இதில், மிகவும் அறியப்பட்ட அமெரிக்க வம்சாவளியான ஹெர்ஷ் கோல்ட்பர்க் போலின் என்பவரும் ஒருவர்.
இஸ்ரேலில் இசை நிகழ்ச்சியிலிருந்து இவரை பிடித்துச் சென்ற ஹமாஸ் படையினர் வீடியோ வெளியிட்ட போது போலின் ஒரு கை துண்டாகி இருந்தது. தற்போது இவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து இஸ்ரேல் ராணுவம் கூறுகையில், ‘‘ரகசிய தகவலின் அடிப்படையில் பணயக் கைதிகளை மீட்க நாங்கள் அங்கு சென்ற போது அவர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தனர்’’ என்றனர். இந்த சம்பவத்திற்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
* இஸ்ரேல் போலீசார் 3 பேர் சுட்டுக்கொலை
காசா போருக்குப் பின், இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்கு கரையில் ஹமாஸ் ஆதரவாளர்களை தேடி இஸ்ரேல் போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை பாலஸ்தீனர்கள் தங்கியுள்ள அகதிகள் முகாமில் நடத்தப்படுகிறது. இதுபோன்று நேற்று நடத்தப்பட்ட சோதனையின் போது பாலஸ்தீன தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 3 இஸ்ரேல் போலீசார் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு கலில் அல் ரஹ்மான் பிரிகேட் என்கிற பெரிதும் அறியப்படாத தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.