அமெரிக்கர் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் சுமார் ரூ.1.77 லட்சம் வரவு வைக்கப்படும் என அதிபர் டிரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன்: அமெரிக்கர் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் $2,000 (சுமார் ரூ.1.77 லட்சம்) வரவு வைக்கப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். பிற நாடுகளுக்கு விதித்த அதீத வரிவிதிப்பால் கிடைத்த தொகையை பங்காக அளிக்கப்போவதாக அவரது ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அமெரிக்காவில் வசிக்கும் பணக்காரர்களுக்கு இது பொருந்தாது என்றும் டிரம்ப் விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பாக அதிபர் ட்ரம்ப் தனது சமூக வலைதள பதிவில் கூறியதாவது:
வரி விதிப்பை எதிர்க்கும் மக்கள் முட்டாள்கள். நாங்கள் இப்போது உலகின் பணக்காரர்கள், மிகவும் மதிக்கப்படும் நாடு, பணவீக்கம் கிட்டத்தட்ட இல்லை, மற்றும் ஒரு சாதனை பங்குச் சந்தை விலை எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்தவை சந்தித்துள்ளது.
"நாங்கள் டிரில்லியன் கணக்கான டாலர்களை எடுத்து வருகிறோம், விரைவில் எங்கள் மிகப்பெரிய கடனான $37 டிரில்லியனை செலுத்தத் தொடங்குவோம். அமெரிக்காவில் சாதனை முதலீடு, தொழிற்சாலைகள் எல்லா இடங்களிலும் அதிகரித்து வருகின்றன. ஒரு நபருக்கு (அதிக வருமானம் உள்ளவர்களைத் தவிர!) குறைந்தபட்சம் $2000 ஈவுத்தொகை அனைவருக்கும் வழங்கப்படும்" என்று அவர் மேலும் கூறினார்.
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் 2-வது முறையாக பதவியேற்ற பிறகு பல நாடுகளுக்கு எதிராக இறக்குமதி வரியை அதிகரித்துள்ளார். டிரம்ப் குறிப்பாக முக்கிய வர்த்தக கூட்டாளிகளான கனடா, மெக்சிகோ மற்றும் சீனா மீதான வரிகளை உயர்த்தினார். இதற்கு எதிரான வழக்கு அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.