அமெரிக்காவில் மனைவி, மகன் கண்முன்னே இந்திய வம்சாவளி விடுதி மேலாளர் தலை துண்டித்து கொலை: வாஷிங் மெஷின் குறித்த வாக்குவாதத்தால் பயங்கரம்
ஹூஸ்டன்: அமெரிக்காவில் உடைந்த வாஷிங் மெஷின் தொடர்பான வாக்குவாதம் முற்றியதால், இந்திய வம்சாவளி விடுதி மேலாளர் தலை துண்டித்துக் கொல்லப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம், டாலஸ் நகரில் உள்ள விடுதியில் மேலாளராகப் பணியாற்றி வந்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சந்திரமவுலி நாகமல்லையா (50). கடந்த 10ம் தேதி, விடுதியில் உடைந்திருந்த வாஷிங்மெஷினை பயன்படுத்த வேண்டாம் என சக ஊழியரான யோர்டானிஸ் கோபோஸ்-மார்டினெஸ் (37) மற்றும் மற்றொரு பெண் ஊழியரிடம் அவர் கூறியுள்ளார்.
அப்போது, தன்னிடம் நேரடியாகப் பேசாமல், பெண் ஊழியர் மூலம் மொழிபெயர்த்துப் பேசியதாகக் கூறி, கோபோஸ்-மார்டினெஸ் கடும் ஆத்திரமடைந்தார். இதைத் தொடர்ந்து, அறையிலிருந்து அரிவாளுடன் வெளியேறிய அவர், சந்திரமவுலியை வெட்டுவதற்காக விரட்டிச்சென்றார். அவரது மனைவி மற்றும் மகன் இருந்த அலுவலகம் வரை துரத்திச் சென்று சரமாரியாக அவரை வெட்டினார். அவரது மனைவி மற்றும் மகன் தடுக்க முயன்றும், அவர்களைத் தள்ளிவிட்டு கொடூரத் தாக்குதலைத் தொடர்ந்த கோபோஸ்-மார்டினெஸ், இறுதியில் சந்திரமவுலியின் தலையைத் துண்டித்துள்ளார்.
பின்னர், துண்டிக்கப்பட்ட தலையை இருமுறை காலால் எட்டி உதைத்து, அதை அங்கிருந்த குப்பைத் தொட்டியை நோக்கி எடுத்துச் சென்றுள்ளார். ரத்தக்கறையுடன் சென்ற அவரை, அவ்வழியாக சென்ற தீயணைப்புப் படையினர் பின்தொடர்ந்து சென்று போலீசாரிடம் பிடித்துக் கொடுத்தனர். கொலைக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அவர், தான் செய்த கொலையை ஒப்புக்கொண்டார். ஏற்கனவே குற்றப் பின்னணி கொண்ட கோபோஸ்-மார்டினெஸ் மீது குடியேற்றத் துறையின் வழக்கும் நிலுவையில் உள்ளது.