அமெரிக்காவின் வர்த்தக போருக்கு மத்தியில் சீனா செல்கிறார் பிரதமர் மோடி: 7 ஆண்டுகளுக்குப் பிறகு பயணம்
புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய பொருட்களுக்கு வரிக்கு மேல் வரி விதித்து வரும் நிலையில், 7 ஆண்டுகளுக்குப் பிறகு இம்மாத இறுதியில் பிரதமர் மோடி சீனாவுக்கு செல்கிறார். பிரதமர் மோடி அரசு முறைப் பயணமாக வரும் 29ம் தேதி ஜப்பான் செல்கிறார். அங்கிருந்து அவர், வரும் 31 மற்றும் செப்டம்பர் 1ம் தேதி தியான்ஜின் நகரில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு (எஸ்இஓ) மாநாட்டில் பங்கேற்க சீனாவுக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடைசியாக பிரதமர் மோடி கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாதம் எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்க சீனா சென்ற நிலையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அங்கு செல்ல உள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு அக்டோபரில் சீன அதிபர் ஜி ஜின்பிங் 2வது முறைசாரா மாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு வந்தார். அதன் பின் 2020ல் கிழக்கு லடாக் எல்லையில் கல்வான் மோதலால் இந்தியா-சீனா உறவு சீர்குலைந்தது. நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு தற்போது படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டு இரு நாட்டு எல்லையில் அமைதி திரும்பி உள்ளது. ரஷ்யாவிடம் அதிகளவு கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்திய பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வரிக்கு மேல் வரி விதித்து வரும் நிலையில், மாற்று சந்தைக்கான வாய்ப்பாக இந்தியா, ரஷ்யா, சீனா கூட்டணி சேருமா என்ற எதிர்ப்பு நிலவி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் எஸ்இஓ மோடியின் சீன பயணம் முக்கியமாக பார்க்கப்படுகிறது.