அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் இம்மாத இறுதிக்குள் நல்ல செய்தி: நிதி ஆயோக் சிஇஓ நம்பிக்கை
புதுடெல்லி: அமெரிக்காவுடனான இந்தியாவின் முன்மொழியப்பட்ட இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்த நேர்மறையான தகவல் இந்த மாத இறுதிக்குள் வெளிவரும் என்று நிதி ஆயோக் சிஇஓ சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
சிஎன்பிசி-டிவி18ன் உலகளாவிய தலைமைத்துவ உச்சிமாநாடு 2025 2வது பதிப்பு நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி சுப்ரமணியம் கூறுகையில்,‘‘அமெரிக்காவுடன் விஷயங்கள் சற்று கடினமாக இருந்ததாக நான் நினைக்கிறேன். மேலும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முயற்சிக்கப்பட்டு வருகின்றது. வர்த்தக பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. மாத இறுதிக்குள் இந்தியா -அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை குறித்த நேர்மறையான தகவல்களை பெறக்கூடும் என்று நம்புகிறேன்.
இரண்டாவது உலகப்போருக்கு பின் பல தவறான தன்மைகள் இருந்தன. இப்போது அப்படி இல்லை. வர்த்தகம் சீராக இருக்கும் நிலையில் உலகம் நிலையற்ற நிலையில் இருக்கின்றது. அந்நிய நேரடி முதலீடு சீராக உள்ளது அல்லது குறைந்து வருகின்றது. இவற்றை எப்படி கையாள்வது என்று உலகிற்கு தெரியவில்லை. குறைந்த வளர்ச்சி ஒரு விதிமுறையாக இருக்கும் இடத்திற்கு உலகம் சென்று கொண்டிருக்கிறது. இவை அனைத்திலும் இந்தியா ஒரு தனித்துவமான வழக்கு. உலகப்பொருளாதாரத்தில் அது பிரகாசமான இடமாகும். அதுதான் அதை முக்கியமானதாக மாற்றுகின்றது” என்றார்.