அமெரிக்காவிற்கு சுற்றுலா வர ரூ.13.16 லட்சம் உத்தரவாத தொகை: வெளிநாட்டினரிடம் வசூலிக்க டிரம்ப் நிர்வாகம் முடிவு
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டாவது முறையாக பொறுப்பேற்றதில் இருந்து அதிரடியாக பல்வேறு புதிய திட்டங்களையும், புதிய விதிகள், புதிய கட்டுப்பாடுகளையும் விதித்து வருகின்றார். இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத் துறை விசா வழங்குவதில் புதிய திட்டத்தை சோதனை முறையில் அமல்படுத்தி உள்ளது.
இதன்படி, வணிகம் மற்றும் சுற்றுலாவிற்காக அமெரிக்காவிற்குள் வருவதற்கு பி-1. பி/2 விசாக்களுக்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டு நபர்கள் விசா காலம் முடிந்த பிறகும் தங்குவதை தடுக்க 15000 அமெரிக்க டாலர்கள் வரை (ரூ.13,16,573)உத்தரவாத தொகையை செலுத்த வேண்டும் என்று வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் வரும் நாடுகளின் பெயர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. குறித்த காலத்துக்குள் அமெரிக்காவில் இருந்து வெளியேறிவிட்டால் இந்த தொகை திருப்பி தரப்படும். இந்த திட்டம் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி வரை அமலில் இருக்கும்.