அமெரிக்காவுடனான வரி பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும்: பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் நம்பிக்கை
கொல்கத்தா: அமெரிக்காவுடனான வரி பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் வணிகர்களின் வர்த்தக மற்றும் தொழில்துறை சபை ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் இந்திய தலைமை பொருளாதார ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்வரன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய வி.அனந்த நாகேஸ்வரன், “இந்திய பொருள்களுக்கு அமெரிக்கா விதித்த வரிகள் தொடர்ந்தால் ஏற்றுமதியில் சரிவு ஏற்படும்.
இந்த வரி பிரச்னைகள் குறித்து இரு அரசாங்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்த பிரச்னைக்கு எட்டு முதல் பத்து வாரங்களில் ஒரு தீர்வு காணப்படும். நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.8 சதவீதமாக இருந்தது. கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு மற்ற நாடுகளை விட இந்தியா பொருளாதாரம் மிக வேகமாக வளர்ச்சி அடைந்தது.
உற்பத்தி, சேவைகள் மற்றும் விவசாயத்தின் வளர்ச்சி அடுத்த இரண்டாண்டுகளில் பொருளாதார முன்னேற்றத்துக்கு பெரும் பங்களிக்கும். மேலும், அதிக நுகர்வு மற்றும் முதலீடுகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை தொடர்ந்து அதிகரிக்கும். பொருளாதாரத்தில் கிராமப்புற தேவை மீள்தன்மையுடன் உள்ளது. அதேசமயம் நகர்ப்புற தேவைகள் அதிகரித்து வருகின்றன.
ஜிஎஸ்டி வரி விகிதங்களில் செய்யப்பட்டுள்ள மாற்றம் நுகர்வோருக்கு அதிக வருமானத்தை அளிக்கும். நகர்ப்புற நுகர்வு அதிகரிக்கும் என்று தெரிவித்தார்.