அமெரிக்காவின் தடையை தொடர்ந்து ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்தியது இந்திய நிறுவனம்: முதல் முறையாக பகிரங்க அறிவிப்பு
புதுடெல்லி: எச்பிசிஎல்-மிட்டல் எனர்ஜி லிமிடெட் (எச்எம்இஎல்) நிறுவனம் ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்தியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், அந்நாட்டை சேர்ந்த ரோஸ்நெப்ட், லுகோயில் ஆகிய 2 எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா சமீபத்தில் பொருளாதார தடை விதித்தது.
ரஷ்யாவிலிருந்து சராசரியாக ஒருநாளுக்கு 17 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் இந்தியாவுக்கு அனுப்பப்படும் நிலையில், அதில் 12 லட்சம் பீப்பாய் வழங்குவது தடை செய்யப்பட்ட இந்த 2 நிறுவனங்களாகும். அமெரிக்காவின் தடையை தொடர்ந்து, ரஷ்ய எண்ணெய் கொள்முதலை மறுசீரமைக்க இந்தியாவின் தனியார் மற்றும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்தன.
அதன்படி, அரசுக்கு சொந்தமான இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) நிறுவனமும் தொழிலதிபர் லட்சுமி மிட்டலின் மிட்டல் எனர்ஜி இன்ஸ்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனமும் இணைந்த கூட்டு நிறுவனமான எச்எம்இஎல் அரசின் கொள்கை மற்றும் சட்டங்களுக்கு இணங்குவதாகவும், ரஷ்ய எண்ணெய் கொள்முதலை நிறுத்தி விட்டதாகவும் அறிவித்துள்ளது.
தற்போது ரஷ்ய எண்ணெய்களுடன் இந்திய துறைமுகத்திற்கு வந்துள்ள அதன் அனைத்து கப்பல்களும் தடை விதிமுறைக்கு உட்படாதவை என தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் தடைக்கு பிறகு ரஷ்ய எண்ணெய் கொள்முதலை நிறுத்தியதாக இந்திய நிறுவனம் ஒன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பது இதுவே முதல் முறை.