சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் ஊடுருவல்; 54 அரியானா இளைஞர்கள் நாடு கடத்தல்: மோசடி கும்பலை வளைக்க போலீஸ் தீவிரம்
புதுடெல்லி:‘டாங்கி ரூட்’ எனப்படும் அபாயகரமான சட்டவிரோத பாதை வழியாக அமெரிக்காவிற்குள் நுழைந்த 54 அரியானா இளைஞர்கள், அங்கிருந்து அதிரடியாக நாடு கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக, பல இளைஞர்கள் வாழ்க்கையைத் தேடி சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குச் செல்ல முயற்சிக்கின்றனர். இதனைப் பயன்படுத்திக்கொள்ளும் மனித கடத்தல் கும்பல்கள், ‘டாங்கி ரூட்’ எனப்படும் அபாயகரமான சட்டவிரோத பாதை வழியாக அவர்களை அமெரிக்கா அல்லது கனடா போன்ற நாடுகளுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
இதற்காக ஒவ்வொரு நபரிடமிருந்தும் ரூ.40 லட்சத்திற்கும் அதிகமாகப் பணம் வசூலிக்கப்படுகிறது. ஈகுவேடார் அல்லது பொலிவியா போன்ற எளிதில் விசா கிடைக்கும் நாடுகளுக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து மத்திய அமெரிக்காவின் அடர்ந்த காடுகள் வழியாகப் பல மாதங்கள் கடும் துன்பங்களுக்கு மத்தியில் மெக்சிகோ எல்லையை அடைந்து, பின்னர் அமெரிக்காவிற்குள் ஊடுருவுகின்றனர். இந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் மனித கடத்தல் கும்பல்கள் குறித்து அமலாக்கத்துறை மற்றும் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) தீவிரமாக விசாரித்து வருகின்றன. இந்த நிலையில், ‘டாங்கி ரூட்’ வழியாக சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்த அரியானாவைச் சேர்ந்த 54 இளைஞர்களை அமெரிக்க அதிகாரிகள் மடக்கிப் பிடித்து, அங்கிருந்து நாடு கடத்தியுள்ளனர்.
இந்த 54 பேரும், நேற்று (அக். 26) டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு சிறப்பு விமானம் மூலம் கொண்டுவரப்பட்டனர். இவர்களில், கர்னால் மாவட்டத்தைச் சேர்ந்த 16 பேரையும் அம்மாநில காவல்துறை பொறுப்பேற்று, முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தது. இந்த சம்பவம் தொடர்பாக அரியானா காவல்துறை தற்போது விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது. தங்களை சட்டவிரோதமாக அனுப்பிவைத்த உள்ளூர் முகவர்கள் மற்றும் இந்த கடத்தல் நெட்வொர்க்கின் மூளையாக செயல்படும் நபர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு நாடு கடத்தப்பட்ட இளைஞர்களிடம் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.