அமெரிக்காவில் வீடற்று வாழும் பல்லாயிரம் பேருக்கு பசியாற்றும் இந்திய பெண்: டிரம்பின் கெடுபிடிக்கு மத்தியில் நெகிழ்ச்சி
வாஷிங்டன்: அமெரிக்காவில் நிகழும் பதற்றமான சூழல் நிலவும் வேளையில், இந்திய வம்சாவளிப் பெண் ஒருவர் தனது சமூக சமையலறை மூலம் பல்லாயிரக்கணக்கான வீடற்ற மக்களுக்கு உணவளித்து அன்பையும், நம்பிக்கையையும் விதைத்து வருகிறார். அமெரிக்க அதிபர் டிரம்ப், நாட்டில் நடக்கும் குற்றங்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சுமார் 2,000 தேசியப் படை வீரர்களைத் தலைநகர் வாஷிங்டனில் குவிக்க உத்தரவிட்டுள்ளார். ஆனால், குற்றங்கள் அதிகம் நடக்கும் பகுதிகளைக் கண்காணிக்காமல், மால் போன்ற பாதுகாப்பான சுற்றுலாத் தலங்களில் வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த பதற்றமான சூழலுக்கு மத்தியில், இந்திய வம்சாவளிப் பெண்ணான நூபுர் பஞ்சாபியின் ‘அன்னசுதா’ சமூக சமையலறை, வர்ஜீனியாவில் ஒரு நம்பிக்கையின் ஒளி வீசுகிறது. வெற்றிகரமாக இயங்கி வந்த தனது தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை விட்டுவிட்டு, வீடற்ற மக்களுக்கு உணவளிக்கும் பணியில் தன்னை அர்ப்பணித்துள்ளார் நூபுர். சமஸ்கிருதத்தில் ‘உணவும் அன்பின் அமிர்தமும்’ என்று பொருள்படும் ‘அன்னசுதா’, 300 தன்னார்வலர்களின் உதவியுடன் மாதம் 6,500 பேருக்கு உணவு வழங்கப்படுகிறது.
தனது தாயின் இழப்பு மற்றும் கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய மன உளைச்சலுக்குப் பிறகு, இந்தப் பணியைத் தொடங்கியதாகக் கூறும் நூபுர், ‘கோடீஸ்வரராக இல்லாதபோதிலும், இந்தப் பணியில் கிடைக்கும் மனநிறைவு வேறு எதிலும் இல்லை’ என்கிறார். அமெரிக்காவின் ஒரு பகுதியில், ஆயுதம் தாங்கிய ராணுவ வீரர்கள் பளிங்குச் சின்னங்களுக்குக் காவலாக நிற்கிறார்கள். மறுபுறம், வர்ஜீனியாவில் தன்னார்வலர்கள் பசியால் வாடும் மக்களுக்கு அமைதியாக உணவு பரிமாறுகிறார்கள். சிக்கன் பாஸ்தா, சமோசா, பட்டர் சிக்கன் என இந்திய மற்றும் அமெரிக்க உணவு வகைகளை வழங்கி பலரின் பசியாற்றி வருகின்றனர்.