அமெரிக்காவின் 50% வரிவிதிப்பு கொள்கையால் இந்திய மாணவர்களின் கல்விக் கனவு தவிடுபொடியாகுமா?.. மாற்று திட்டங்களை பின்பற்ற கல்வியாளர்கள் எச்சரிக்கை
டெல்லி: அமெரிக்கா - இந்தியா இடையேயான வர்த்தகப் போர் மற்றும் வரி விதிப்பு மோதல்களால், அமெரிக்காவில் உயர்கல்வி பெற விரும்பும் இந்திய மாணவர்களின் எதிர்காலம் பல்வேறு சவால்களைச் சந்திக்கும் அபாயம் எழுந்துள்ளது. சர்வதேச உறவுகளில் ஏற்படும் பதற்றங்கள், தூதரக நடவடிக்கைகளில் இருந்து கல்வியைப் பாதிப்பதில்லை எனத் தோன்றினாலும், அதன் தாக்கங்களில் இருந்து கல்வித் துறை தப்பிப்பதில்லை. இந்தியா - அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பனிப்போர் தீவிரமடைந்துள்ளதால், இந்திய மாணவர்கள் புதிய சவால்களை எதிர்கொள்ள நேரிடும். தூதரக உறவுகளில் ஏற்படும் விரிசல், கடுமையான விசா பரிசீலனைக்கு வழிவகுக்கும். இதனால், விசாவுக்கான நேர்காணல் கிடைப்பதில் தாமதம், காரணமற்ற நிர்வாகச் செயல்பாடுகள் என மாணவர்கள் பாதிப்படையக்கூடும்.
மேலும், வர்த்தகப் போரினால் ஏற்படும் பொருளாதாரச் சிக்கல்களால் ரூபாயின் மதிப்பு சரியும்போது, வெளிநாட்டில் படிப்பதற்கான செலவு இயல்பாகவே அதிகரிக்கிறது. இது தவிர, விமானப் பயணக் கட்டணங்கள், தொழில்நுட்ப சாதனங்கள் போன்றவற்றின் மீது வரிகள் விதிக்கப்பட்டால், மாணவர்கள் திட்டமிட்டதை விடப் பன்மடங்கு அதிகமாகச் செலவழிக்க வேண்டியிருக்கும். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் மோசமடைந்தால், மாணவர்களின் வேலைவாய்ப்புகளிலும் சிக்கல்கள் ஏற்படலாம். எச்-1பி போன்ற பணிபுரியும் விசாக்கள் மற்றும் படிப்புக்குப் பிந்தைய பயிற்சித் திட்டங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால், சில அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டு மாணவர்களைப் பணியமர்த்தத் தயக்கம் காட்டக்கூடும்.
இவை எல்லாவற்றையும் விட, புவிசார் அரசியல் மோதல்கள் பொதுமக்களின் கண்ணோட்டத்தை மாற்றி, வெறுப்புப் பேச்சுகளைத் தூண்டக்கூடும். இது இந்திய மாணவர்களுக்குப் பல்கலைக்கழக வளாகங்களிலோ அல்லது அவர்கள் வசிக்கும் இடங்களிலோ உளவியல் ரீதியான பாதிப்புகளையும், பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தக்கூடும். இந்தச் சவால்களுக்கு மத்தியிலும், மாணவர்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம். விசாக்களுக்கு முன்கூட்டியே விண்ணப்பிப்பது, தேவையான ஆவணங்களைத் தெளிவாகவும் வெளிப்படையாகவும் வைத்திருப்பது அவசியம். எதிர்பாராதவிதமாக விசா மறுக்கப்பட்டால், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் படிப்பதற்கான மாற்றுத் திட்டங்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.
அந்நியச் செலாவணி மாற்று விகிதத்தை முன்கூட்டியே உறுதி செய்துகொள்வதும், நம்பகமான கல்வி ஆலோசகர்களின் ஆலோசனைகளைப் பின்பற்றுவதும் நல்லது. அரசியல் விளையாட்டுகளில் கல்வி ஒருபோதும் தேவையற்ற பாதிப்புக்கு உள்ளாகக் கூடாது. ஆனால், உலகளாவிய அதிர்வுகளை மாணவர்கள் தான் முதலில் உணர்கிறார்கள் என்பதே நிதர்சனம். எனவே, இந்தியக் குடும்பங்கள் பதற்றமடையாமல், தெளிவான திட்டமிடலுடனும் நிபுணர்களின் வழிகாட்டுதலுடனும் இந்தச் சூழலை எதிர்கொள்ள வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்தி கூறுகின்றனர். அமெரிக்காவின் சர்வதேச கல்வி நிறுவனம் மற்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை இணைந்து வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, கடந்த 2022-2023ம் கல்வியாண்டில், அமெரிக்காவில் 2,68,923 இந்திய மாணவர்கள் உயர்கல்வி பயின்று வருகின்றனர்.
கடந்த 5 ஆண்டுகளில் ஒவ்வொரு கல்வியாண்டிலும் அமெரிக்காவில் படித்த இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது. அதன்படி 2022-2023 - 2,68,923 பேர், 2021-2022 - 1,99,182 பேர், 2020-2021 - 1,67,582 பேர், 2019-2020 - 1,93,124 பேர், 2018-2019 - 2,02,014 மாணவர்கள் படித்தனர். கடந்த 2023ம் ஆண்டில் மட்டும், சுமார் 1.3 லட்சத்திற்கும் அதிகமான இந்திய மாணவர்களுக்கு அமெரிக்கா மாணவர் விசாவை (எப்-1 விசா) வழங்கியுள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, அமெரிக்காவுக்குச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து, வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது. அமெரிக்காவின் மொத்த வெளிநாட்டு மாணவர் எண்ணிக்கையில், இந்தியர்கள் சுமார் 25% க்கும் அதிகமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.