அரசியல் பதற்றம், கருத்துச் சுதந்திரம் பறிப்பால்...தாய்நாடான அமெரிக்காவின் அடையாளம் தொலைந்துவிட்டது: ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா வேதனை
சான் செபாஸ்டியன்: தனது தாய்நாடான அமெரிக்காவை தற்போது அடையாளம் காண முடியவில்லை என பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி வேதனை தெரிவித்துள்ளார். பிரபல ஹாலிவுட் நடிகையும், ஐ.நா. சபையின் அகதிகளுக்கான நல்லெண்ண தூதருமான ஏஞ்சலினா ஜோலி, தனது கணவரும், நடிகருமான பிராட் பிட்டை விவாகரத்து செய்ததில் இருந்து பல்வேறு தனிப்பட்டப் பிரச்னைகளை சந்தித்து வருகிறார். தனது குழந்தைகள் வளர்ந்த பிறகு, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து வெளியேறி வெளிநாட்டில் குடியேற விரும்புவதாக அவர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
சில செல்வாக்கு மிக்க நபர்களின் அதிகாரத்தால் எளிய மக்களின் குரல்கள் எப்படி நசுக்கப்படுகின்றன என்பதை தனது குழந்தைகள் பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த சூழலில், ஸ்பெயினில் நடைபெற்ற சான் செபாஸ்டியன் திரைப்பட விழாவில், தனது புதிய படமான ‘கூட்டர்’ குறித்த செய்தியாளர் சந்திப்பில் ஏஞ்சலினா ஜோலி கலந்து கொண்டார். அப்போது அவரிடம் அமெரிக்காவின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘தனிப்பட்ட கருத்து வெளிப்பாடுகளையும், சுதந்திரத்தையும் பிரிக்கும் அல்லது கட்டுப்படுத்தும் எந்தவொரு செயலும் மிகவும் ஆபத்தானது.
தற்போதைய காலக்கட்டம் மிகவும் கடினமாக உள்ளது. எனது தாய்நாடான அமெரிக்காவை என்னால் இப்போது அடையாளம் காண முடியவில்லை’ என வேதனையுடன் குறிப்பிட்டார். அமெரிக்காவில் நிலவி வரும் அரசியல் பதற்றம், ஊடகங்கள் மீதான விமர்சனங்கள் மற்றும் கருத்துச் சுதந்திரம் தொடர்பான கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், ஏஞ்சலினா ஜோலியின் இந்தப் பேச்சு சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.