அமெரிக்காவின் வரியால் பாதிக்கப்பட்ட ஏற்றுமதியாளர்களுக்கு உதவ திட்டம் தயாரிக்கும் ஒன்றிய அரசு: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
புதுடெல்லி: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டி: ஆகஸ்ட் 27ம் தேதி முதல் அமெரிக்கா விதித்துள்ள இரண்டாவது கட்ட வரியான கூடுதல் 25 சதவீத வரி அமலுக்கு வந்தது. பாதிக்கப்பட்ட பல்வேறு தொழில்கள் சம்பந்தப்பட்ட துறைகள் அல்லது அமைச்சகங்கள் வரி விதிப்பின் தாக்கம் குறித்து பகிர்ந்து கொள்கின்றன. எனவே அவர்களின் கருத்துக்களை பெறுகிறோம்.
50 சதவீத வரியால் பாதிக்கப்பட்ட ஏற்றுமதியாளர்களுக்கு உதவ திட்டம் தயாரிக்கும் பணியில் ஒன்றிய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஒவ்வொரு அமைச்சகமும் தொழிலதிபர்களிடம் எவ்வளவு தாக்கம் என்பது குறித்து மதிப்பீட்டை கேட்டு வருகின்றன. முக்கிய ஜிஎஸ்டி மாற்றமானது மக்கள் சீர்திருத்தமாகும். வரி குறைப்பு ஒவ்வொரு குடும்பத்திற்கும் பயனளிக்கும். நுகர்வு அதிகரிக்கும் மற்றும பொருளாதாரத்தை வலுப்படுத்தும்.
செப்டம்பர் 22ம் தேதி ஜிஎஸ்டியின் மறுசீரமைப்பு அமலுக்கு வரும்போது சோப்புகள் முதல் கார்கள் வரை, ஷாம்புகள் முதல் டிராக்டர்கள் மற்றும் ஏர் கண்டிஷனர்கள் வரை கிட்டத்தட்ட 400 தயாரிப்புகளின் விலை குறையும். தனிநபர் சுகாதாரம் மற்றும் ஆயுள் காப்பீட்டுக்கு செலுத்தப்படும் பிரீமியம் வரி இல்லாததாக இருக்கும். இதனால் அவர்களின் நிதி பாதிக்கப்படும் என்று நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன ” என்றார்.
* முழுபலனையும் நுகர்வோருக்கு வழங்க வேண்டும்
ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், ‘‘ஜிஎஸ்டி வரி விகித குறைப்புகள் எளிமைப்படுத்தலுடன் சேர்ந்து உள்நாட்டு தேவையை அதிகரிக்கும். சிறு மற்றும் பெரிய நிறுவனங்கள் அதிக வாய்ப்புக்களை பெறும். வேலைவாய்ப்புக்கான புதிய வழிகள் உருவாக்கப்படும். வருவாய் அதிகரிக்கும்.
இது அதிக செலவினங்களுக்கு வழி வகுக்கும். இது நாட்டை முன்னோக்கி அழைத்துச்செல்வதற்கு ஒரு நல்ல வளர்ச்சி சுழற்சியை உருவாக்கும். ஜிஎஸ்டி வரி விகித குறைப்புகளின் முழு பலனையும் நுகர்வோருக்கு வழங்க வேண்டும் என்று தொழில்துறையினரை கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.