அமெரிக்கா-சீனா வர்த்தக போரில் திடீர் திருப்பம்; டிரம்ப்-ஜி ஜின்பிங் சந்திப்பில் இறுதி முடிவு: ஒப்பந்தத்தில் அடிப்படை உடன்பாடு எட்டப்பட்டதாக அறிவிப்பு
வாஷிங்டன்: அமெரிக்கா - சீனா இடையே நீடித்து வந்த வர்த்தகப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், இரு நாடுகளுக்கும் இடையே அடிப்படை உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. உலகின் இருபெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக வர்த்தகப் போர் நீடித்து வந்தது. குறிப்பாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம், சீனப் பொருட்கள் மீது 100% வரை வரி விதிப்பதாக மிரட்டல் விடுத்திருந்தது. இதற்குப் பதிலடியாக, எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அத்தியாவசியமான அரிய வகை கனிமங்களின் ஏற்றுமதிக்கு சீனா கட்டுப்பாடுகளை விதித்தது.
டிக்டாக் செயலியின் பாதுகாப்பு மற்றும் வர்த்தகப் பற்றாக்குறை போன்ற பிரச்னைகளாலும் இருதரப்பு உறவுகளில் பெரும் பதற்றம் நிலவி வந்தது. இரு தலைவர்களும் கடைசியாக 2019ல் சந்தித்திருந்த நிலையில், இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படாமல் இருந்தது. இந்தச் சூழலில், அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்த வாரம் சந்திக்கவுள்ள நிலையில், இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தில் ‘அடிப்படை உடன்பாடு’ எட்டப்பட்டுள்ளதாக இரு நாடுகளும் நேற்று அறிவித்துள்ளன. மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசியான் உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
சீனப் பொருட்கள் மீதான 100% வரி விதிப்பு மிரட்டல் திறம்பட கைவிடப்படுவதாக அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசன்ட் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த உடன்பாட்டின்படி, அரிய வகை கனிமங்கள் ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளை சீனா ஓராண்டுக்கு மறுமதிப்பீடு செய்யவும், அமெரிக்க விவசாயிகளிடமிருந்து சோயாபீன்களை மீண்டும் அதிக அளவில் கொள்முதல் செய்யவும் ஒப்புக்கொண்டுள்ளது. மேலும், டிக்டாக் செயலியின் அமெரிக்க செயல்பாடுகள் குறித்தும் இறுதி ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் இறுதி விவரங்கள், வரும் வியாழக்கிழமை (அக். 30) அன்று தென் கொரியாவில் நடைபெறும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் அதிபர் டிரம்ப் மற்றும் ஜி ஜின்பிங் சந்திப்பின்போது இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.