அமெரிக்காவில் போயிங் நிறுவன ஊழியர்கள் ஸ்டிரைக்: போர் விமானங்கள் உற்பத்தி பாதிப்பு
நியூயார்க்: உலகின் மிகப்பெரிய விமான தயாரிப்பு நிறுவனங்களில் போயிங் விமான நிறுவனம் முக்கியமானது. இந்த நிறுவனம் பயணிகள் விமானங்கள், போர் விமானங்களை தயாரித்து விற்பனை செய்கிறது.
அமெரிக்காவின் செயின்ட் லுயிஸ், செயின்ட் சார்லஸ், மிசோரி, மஸ்கவுட், இலினாயிஸ் ஆகிய இடங்களில் போயிங் போர் விமானங்கள் தயாரிப்பு தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு 3 ஆயிரத்து 200 ஊழியர்கள் போர் விமானங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் திங்கள்கிழமை இரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு போயிங் நிறுவன ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தொழிற்சங்க உறுப்பினர்கள் போயிங் நிறுவனத்தின் திருத்தப்பட்ட ஒப்பந்தத்தை நிராகரித்ததைத் தொடர்ந்து வேலைநிறுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஊதியத்தை 20% உயர்த்தியும், ஓய்வூதிய பங்களிப்புகளை அதிகரித்தும் அளிக்கப்பட்ட ஒப்பந்தத்தை ஊழியர்கள் நிராகரித்துள்ளனர். இதனால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. போயிங் நிறுவனத்தின் 737 மேக்ஸ் விமானம் கடந்த 2018ல் இந்தோனேஷியாவிலும்,2019ல் எத்தியோப்பியாவிலும் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது. கடந்த ஜூன் மாதம் ஏர் இந்தியாவால் இயக்கப்பட்ட போயிங் ட்ரீம்லைனர் விபத்துக்குள்ளானதில் ஒரே ஒரு நபரை தவிர 240 பயணிகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.