அமெரிக்காவின் 100% வரி விதிப்பு எதிரொலி.. இந்திய பங்குச்சந்தையில் மருந்து நிறுவனங்களின் பங்கு விலை வீழ்ச்சி
மும்பை : இந்திய பங்குச்சந்தையில் மருந்து நிறுவனங்களின் பங்கு விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், தனது சமூக வலைத்தள பக்கத்தில் விடுத்துள்ள பதிவில், வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டு அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்து பொருட்களுக்கு 100% வரி விதிக்கப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளார். அதே வேளையில், அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் மருந்து நிறுவனங்களுக்கு வரி எதுவும் விதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டது.இந்த வரி விதிப்பு வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அவர் தெரிவித்துள்ளார். ட்ரம்பின் இந்த அறிவிப்பால், இந்திய மருந்து நிறுவனங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அமெரிக்காவின் 100% வரி விதிப்பு காரணமாக இந்திய பங்குச்சந்தையில் மருந்து நிறுவனங்களின் பங்கு விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக சன் பார்மா 4 சதவீதமும், பயோகான் பங்கு விலை 3.7 சதவீதமும் சரிந்துள்ளது. அபாட் இந்தியா பங்கு விலை 3.4 சதவீதம் விலை சரிந்து வர்த்தகமாகிறது. லூபின் நிறுவன பங்கு விலை 2.4 சதவீதமும் சிப்லா, டாக்டர் ரெட்டீஸ் லேப், அரவிந்தோ பார்மா பங்குகள் விலை 2% சரிந்துள்ளன. நாட்கோ பார்மா, லாரஸ் லேப்ஸ், க்ளாண்ட் பார்மா மற்றும் ஐபிசிஏ லேபரட்டரீஸ் ஆகியவற்றின் பங்குகள் தலா 3%க்கும் அதிகமாக சரிந்தன. அதே நேரத்தில் ஜைடஸ் லைப் ஸ்டைல்ஸ் , டிவிஸ் லேபரட்டரீஸ், அஜந்தா பார்மா, கிரானுல்ஸ் இந்தியா, அல்கெம் லேபரட்டரீஸ் மற்றும் மேன்கைண்ட் பார்மா ஆகிய மருந்து நிறுவனங்களின் பங்குகள் 2%க்கும் அதிகமாக சரிந்தன. இதனால் நிஃப்டி பார்மா குறியீடு 2.6% கீழ் குறைந்தது.