நவம்பர் 1-ந்தேதிக்குள் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படாவிட்டால் சீனா மீதான வரியை 155 சதவீதமாக உயர்த்துவேன் : அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை
வாஷிங்டன்: அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்காவுடன் ஒரு நியாயமான வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால், நவம்பர் 1ம் தேதி முதல் சீனா 155 சதவீதம் வரை வரிகளை எதிர்கொள்ள நேரிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்தார். இதற்கு பதிலடியாக அமெரிக்க பொருட்கள் மீது சீனா கூடுதல் வரியை விதித்தது.
இதனால் அமெரிக்கா-சீனா இடையே வர்த்தக போர் ஏற்பட்டது. இப்பிரச்சனையை தீர்க்க இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதையடுத்து சீனா மீதான கூடுதல் வரி விதிப்பை டிரம்ப் நிறுத்தி வைத்தார். இதற்கிடையே அரியவகை கனிமங்கள் மற்றும் அது சார்ந்த தொழில்நுட்ப வர்த்தகத்தில் சீனா முக்கிய கட்டுப்பாடுகளை விதித்ததால் அதிருப்தி அடைந்த டிரம்ப், வருகிற நவம்பர் 1-ந்தேதி முதல் சீனா மீது கூடுதலாக 100 சதவீத வரி விதிக்க உள்ளதாக சமீபத்தில் அறிவித்தார்.
இந்த நிலையில், அமெரிக்க வெள்ளை மாளிகையில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, அதிபர் டிரம்ப் பேசுகையில், "சீனா மீது அமெரிக்கா மிகவும் மரியாதையுடன் நடந்து கொண்டது. ஆனால் தனது நிர்வாகம் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை பொறுத்துக் கொள்ளாது. சீனா எங்களை மிகவும் மதிக்கிறது என்று நான் நினைக்கிறேன். அவர்கள் 55 சதவீத வரிகளை செலுத்துகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியும். சீனாவுடன் ஒரு அற்புதமான ஒப்பந்தத்தை நாங்கள் செய்யப்போகிறோம் என்று நினைக்கிறேன். நவம்பர் 1-ந்தேதிக்குள் இந்த வர்த்தக ஒப்பந்தம் ஏற்படாவிட்டால் சீனா மீதான வரியை 155 சதவீதமாக உயர்த்துவேன்,"இவ்வாறு தெரிவித்தார்.