அமெரிக்காவில் இருந்து முதன்முறையாக 22 லட்சம் டன் LPG இறக்குமதி.. வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து!!
வாஷிங்டன் : அமெரிக்காவில் இருந்து 22 லட்சம் டன் LPG இறக்குமதி செய்ய ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக ஒன்றிய அரசு தகவல் அளித்துள்ளது. இந்தியா தனது எல்.பி.ஜி. தேவையில் 50% க்கும் அதிகமாக இறக்குமதி செய்கிறது. இதில் பெரும்பாலான விநியோகம் மேற்கு ஆசிய சந்தைகளிலிருந்து வருகிறது. இதனிடையே இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் அமெரிக்கா சென்று அங்குள்ள எண்ணெய் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், LPG இறக்குமதி செய்ய ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி திங்களன்று இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள், சுமார் 2.2 மில்லியன் டன் எல்.பி.ஜி. இறக்குமதி செய்வதற்கான ஓராண்டு கால ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளன. இந்த ஒப்பந்தம் அமெரிக்காவுடன் இந்தியா செய்துகொள்ளும் முதல் சமையல் எரிவாயு கொள்முதல் ஒப்பந்தமாகும். இந்த அளவு இந்தியாவின் வருடாந்திர எல்.பி.ஜி. இறக்குமதியில் கிட்டத்தட்ட 10% ஆகும். இது நாட்டின் விநியோக மூலோபாயத்தில் ஒரு பெரிய மாற்றத்தைக் குறிக்கிறது.