அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி !!
மும்பை : அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்க விசா கட்டண உயர்வு காரணமாக இந்திய பங்குச் சந்தை 2வது நாளாக வீழ்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்காவில் எச்1பி விசா கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டிருப்பது, இந்திய ஐடி நிறுவனங்களையும் ஊழியர்களையும் நேரடியாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதன் எதிரொலியாக, இந்திய பங்குச் சந்தைகளில் ஐடி நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவைக் கண்டுள்ளன. இன்றைய வர்த்தகம் தொடங்கியது முதலே இந்திய பங்குச் சந்தை சரிவுடன் காணப்படுகிறது.
இதனிடையே அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.88.46 காசுகளாக உள்ளது. 50% வரி விதிப்பு, தொடர்ந்து வெளியேறும் அந்நிய நிதி ஆகியவை ரூபாய் மதிப்பு சரியக் காரணம் என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ள நிலையில், ரூபாய் மதிப்பு சரிவால், தங்கம் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.