ஆம்புலன்ஸ் டிரைவரை மிரட்டிய விவகாரம் நாலாந்தர அரசியல்வாதி போல் பேசும் எடப்பாடி: பெ.சண்முகம் கண்டனம்
அரியலூர்: அரியலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: குடியரசு துணை தலைவர் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை தமிழக எம்.பிக்கள் அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்ற பிரசாரம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. அவர் தமிழர் என்பதை விட, அவர் ஒரு ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர். எனவே ஆர்.எஸ்.எஸ் ராதாகிருஷ்ணனை ஆதரிக்கும் பேச்சுக்கே இடமில்லை. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, ஆம்புலன்ஸ் மீது கோபமா அல்லது வேறு யார் மீது உள்ள கோபத்தை, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது காண்பித்துள்ளார் என தெரியவில்லை.
உலகம் முழுவதுமே ஆம்புலன்ஸ் வந்தால் வழிவிட வேண்டும் என்பது எல்லாருமே கடைப்பிடிக்க வேண்டியது நியதி. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி ஒரு நாலாந்தர அரசியல்வாதியை போல பேசியுள்ளார். இது கண்டனத்துக்கு உரியது. இதற்கு அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும். தரமான கல்வியை தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மாணவர்களுக்கு வழங்கும் வகையில் ஆசிரியர்கள் காலி பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும். தொகுப்பூதியம் மற்றும் மதிப்பூதியத்தில் ஏற்கனவே டெட் தேர்வில் வென்று இருக்க கூடியவர்களுக்கு பணி வாய்ப்பை அரசு வழங்க வேண்டும்.