ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தாக்கப்படுவது ஏற்கத்தக்கது அல்ல: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை காட்டம்
மதுரை: எடப்பாடி பரப்புரை கூட்டத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர், பணியாளர் தாக்கப்பட்டதற்கு ஐகோர்ட் கிளை கண்டனம் தெரிவித்துள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரச்சார பயணம் மேற்கொண்டுள்ளார். வேலூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட போது 108 ஆம்புலன்ஸ் சென்றது. நோயாளி இல்லாமல் ஒவ்வொரு கூட்டத்திலும் வெறும் வாகனத்தை வேண்டுமென்றே ஓட்டிக்கொண்டு வருவதாக எடப்பாடி குற்றம் சாட்டினார். இதையடுத்து ஆம்புலன்ஸ் டிரைவர் மீது கட்சியினர் தாக்குதல் நடத்தினர்.
இதன் பிறகு ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மீது தாக்குதல் நடத்துபவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்நிலையில் ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது திருச்சி, வேலூரில் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட அரசியல் கட்சிகள் மட்டுமே ஆம்புலன்ஸ் ஊழியர்களை தாக்குவதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர் நீதிபதிகள் கூறியதாவது: ஆம்புலன்ஸ் பணியாளர்கள் தாக்கப்படுவது ஏற்கதக்கது அல்ல.
தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும், சமூக அமைப்பாக இருந்தாலும் ஆம்புலன்சுக்கு வழிவிட வேண்டும். பொதுக் கூட்டங்களில், மக்கள் அதிகமாக இருந்தாலும் ஆம்புலன்ஸ்க்கு வழிவிட வேண்டும். அனைத்து 108 ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்குவது சாத்தியமா? 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கோரிய மனு மீது டிஜிபி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்.12-க்கு தள்ளிவைத்தனர்.