அம்பத்தூரில் விடுபட்ட இடங்களில் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து தொடங்க வேண்டும்: பேரவையில் ஜோசப் சாமுவேல் எம்எல்ஏ வலியுறுத்தல்
சென்னை: சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது அம்பத்தூர் எம்எல்ஏ ஜோசப் சாமுவேல் (திமுக) பேசியதாவது: அம்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 13 வார்டுகளில், 10 வார்டுகளுக்கு பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்ட பணிகள் முழுமையாக அமைக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 83வது வார்டில் உள்ள மாதனாங்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் 79, 80, 81, 82 ஆகிய வார்டுகளில் விடுபட்ட சாலைகளுக்கு பாதாள சாக்கடை பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை.
எனவே, மிகவும் அவசர அவசியமான இந்த பணிகளை விரைவில் தொடங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதற்கு பதில் அளித்து நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், ‘புதிதாக பாதாள சாக்கடை திட்டம் அமைப்பதற்கான கருத்துருக்கள் பெறப்பட்டு, திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை. உறுப்பினர் கூறியதை அதிகாரிகளிடம் கேட்டு தக்க பதில்கள் உங்களுக்குத் தரப்படும்,’ என்றார்.