அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பயன்பாட்டிற்கு திறக்கப்படாத நவீன பேருந்து நிலையம்; சாலையில் காத்திருக்கும் பயணிகள்
அம்பத்தூர்: அம்பத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து ஆவடி, செங்குன்றம், மதுரவாயல், அண்ணா நகர், கோயம்பேடு உள்ளிட்ட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கும், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் இந்த பேருந்து நிலையத்தில், போதிய வசதிகள் இல்லாததால் மறுசீரமைக்கும் வகையில் புதிய பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இங்கு, டிஜிட்டல் வசதிகள், தனித்னி நுழைவு, நேரக்காப்பாளர் அறை, தாய்மார்களுக்கு பாலூட்டும் அறை, எல்இடி மின் விளக்குகள், நவீன கழிப்பறைகள் மற்றும் பயணிகளுக்கான இருக்கைகள் மற்றும் பயணிகள் தங்கும் கட்டண அறை உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன. ஆனால், பணிகள் முடிந்தும் புதிய பேருந்து நிலையம் தற்போது வரை திறக்கப்படாமல் உள்ளது. இதனால், பொதுமக்கள் மழை, வெயிலில், சாலையில் ஓரமாக பேருந்துக்கு காத்திருக்கும் நிலை உள்ளது. மேலும் பொதுமக்கள் அதிகளவில் சாலையில் கூடுவதால் பேருந்துகள் நீண்ட வரிசையில் நின்று போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலை உள்ளது. எனவே அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.