அம்பத்தூரில் சிறுமி, சிறுவனை துரத்தி துரத்தி கடித்து குதறிய தெரு நாய்: சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு
அம்பத்தூர்: அம்பத்தூரில் சிறுமி, சிறுவனை துரத்தி துரத்தி தெருநாய் கடித்து குதறியது. சிசிடிவி காட்சி வெளியாகி இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்பத்தூர் ஓரகடம் கோவிந்தராஜ் தெருவை சேர்ந்தவர் சரவணன் பிரசாத். இவரது மகள் தன்மதி (8). அதே பகுதியை சேர்ந்தவர் புவனேஸ்வரி. இவரது மகன் கவிஷ் (6). தன்மதியும், கவிசும் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று தன்மதி, வீட்டில் இருந்து வெளியே வந்தாள். அப்போது திடீரென ஒரு தெரு நாய், தன்மதியை விரட்டியது. இதனால் பயந்து போன அவள், ஓட்டம் பிடித்தாள். அவளை துரத்தி துரத்தி நாய் கடித்து குதறியது. அந்த நேரத்தில் அவ்வழியாக வந்த கவிஷ், சிறுமியை நாய் கடிப்பதை பார்த்து பயந்து ஓடினான். அவனையும் நாய் துரத்தி துரத்தி கடித்துள்ளது. இருவரையும் ஆக்ரோஷமாக கடித்ததில் பலத்த காயம் ஏற்பட்டு அலறி துடித்தனர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தெரு நாைய அடித்து விரட்டி விட்டு, இருவரையும் மீட்டு ஆவடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தன்மதியின் கை, காலிலும், கவிஷுக்கு கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இருவரும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அம்பத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தன்மதியின் தந்தை சரவணன் பிரசாத் கூறுகையில், ‘எங்கள் பகுதியில் தெரு நாய்கள் மற்றும் மாடுகள் சர்வ சாதாரணமாக சுற்றி திரிகிறது. நாய் கடித்ததில் குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்” என்றார்.
கவிஷ் தாய் புவனேஸ்வரி கூறுகையில்,”நாய் கடித்ததில் எனது மகனின் தொடை, கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கவிஷுக்கு சிறுநீரக உப்பு உள்ளதால் பரிசோதித்த பின்னரே நாய்கடி ஊசி தடுப்பூசி போட வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த பகுதியில் அதிகளவு சிறுவர்கள் இருப்பதால் தெரு நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். என் மகன் போன்று மற்ற குழந்தைகள் பாதிக்கப்பட கூடாது” என்றார். சிறுமி, சிறுவனை நாய் கடித்து குதறியது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.