அமராவதி பாசன பகுதியில் நெல் நடவு பணி தீவிரம்
உடுமலை: அமராவதி பாசன பகுதியில் நெல் நடவு பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.உடுமலை அருகே உள்ள அமராவதி அணை மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 54 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பழைய ஆயக்கட்டு பகுதிக்கு ஆறு வழியாகவும், புதிய ஆயக்கட்டு பகுதிக்கு பிரதான கால்வாய் வழியாகவும் தண்ணீர் திறக்கப்படுகிறது.தற்போது பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கொழுமம்- குமரலிங்கம் வாய்க்கால் பாசன பகுதியில் நெல் நடவு பணியை விவசாயிகள் துவக்கி உள்ளனர். வயலில் பாத்திகட்டி, தண்ணீரை தேக்கிவைத்து நெல் விதைகளை தூவி வருகின்றனர்.
இவை முளைவிட்டதும், நாற்று நடும் பணி நடைபெறும்.90 அடி உயரம் கொண்ட அமராவதி அணையில் நேற்று நீர்மட்டம் 88.65 அடியாக இருந்தது. அணைக்கு 488 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. 624 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.