அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்க சாத்தியக்கூறு ஆராய்ந்து பரிந்துரை செய்ய வல்லுனர் குழு அமைப்பு: அமைச்சர் ராஜேந்திரன் தகவல்
சென்னை: சுற்றுலா மற்றும் சர்க்கரைத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நேற்று வெளியிட்ட அறிக்கை: அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த 1962ம் ஆண்டு திருப்பூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தில் தினசரி 1,250 டன்கள் அரவை திறனுடனும், 2.15 லட்சம் மெட்ரிக் டன்கள் ஆண்டு அரவைத் திறனுடனும் ஆரம்பிக்கப்பட்டது. அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் அரவைக்கு போதுமான கரும்பு இல்லாத காரணத்தாலும், சுமார் 60 ஆண்டுகள் பழமையான இயந்திரங்களின் காரணமாக அரவையின்போது அடிக்கடி ஏற்பட்ட இயந்திர கோளாறுகள் காரணமாகவும் கடந்த 2023-24 அரவைப் பருவம் முதல் தற்காலிகமாக ஆலை இயங்காமல் இருந்து வருகிறது.
அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை பகுதிகளைச் சார்ந்த விவசாயிகள், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை புனரமைத்து மீண்டும் இயக்க வேண்டும் என தொடர்ந்து அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி தமிழ்நாடு முதல்வர் திருப்பூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட போது, அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை பகுதியைச் சார்ந்த விவசாயிகள் முதல்வரை நேரில் சந்தித்து அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை புனரமைத்து மீண்டும் இயக்குவதற்கு கோரிக்கை வைத்தனர்.
சர்க்கரை ஆலையை புனரமைத்து மீண்டும் இயக்குவதற்கான வழிவகைகளை ஆராய சர்க்கரை துறை இயக்குநர் தலைமையில் கூடுதல் இயக்குநர் தலைமையில் 10 உறுப்பினர்கள் கொண்ட ஒரு வல்லுனர் குழு அமைத்து அரசாணை வெளியிட உத்தரவிட்ட முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.அந்த குழு அறிக்கையின் அடிப்படையில், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்குவது குறித்து தொடர் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.