ஆழ்வார்பேட்டை நிதி நிறுவனத்தில் ரூ.7 கோடி மோசடி: தலைமறைவான 2 நிர்வாகிகள் திருநெல்வேலியில் கைது
சென்னை: ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் ‘ருத்ரா’ என்ற பெயரில் நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனம், எங்கள் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யும் பணத்திற்கு அதிக வட்டி தருவதாக விளம்பரம் செய்துள்ளது. அதை நம்பி அந்த நிதி நிறுவனத்தில் பொதுமக்கள் பல கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர். ஆனால் சொன்னப்படி முதலீட்டாளர்களுக்கு வட்டி தரவில்லை.
இதனால் முதலீடு செய்த பணத்தை பொதுமக்கள் திரும்ப கேட்டனர். ஆனால் அவர்கள் பணத்தை திரும்ப கொடுக்காமல் நிதி நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவாகிவிட்டனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் சென்னை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். அதன்மீது பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் விசாரணை நடத்தினார். அப்போது 323 பேரிடம் ரூ.7 கோடி வரை மோசடி நடந்தது உறுதியானது.
அதைதொடர்ந்து ‘ருத்ரா’ நிதி நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அதைதொடர்ந்து தலைமறைவாக இருந்த ருத்ரா நிறுவனத்தின் நிர்வாகிகளான சின்ன மணிவேலன் மற்றும் சங்கர் ஆகியோரை நேற்று முன்தினம் திருநெல்வேலி பகுதியில் வைத்து இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான குழுவினர் கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் சென்னைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.