சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு எதிரான அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க 60 கட்சிகளுக்கு அழைப்பு
சென்னை: சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு எதிரான அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க 60 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நவம்பர் 4ந்தேதி முதல் தீவிர வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் பணிகள் தொடங்க உள்ளன. இதற்கு திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால், அதிமுக, பாஜக உள்பட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் வரவேற்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், வரும் 2ந்தேதி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை தியாகராய நகரில் உள்ள அக்கார்டு நட்சத்திர ஓட்டலில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்குமாறு தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு மட்டுமின்றி கூட்டணியில் இல்லாத கட்சித் தலைவர்களையும் அழைக்கும்படி தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். அந்த வகையில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு எதிரான அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க 60 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
