அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை மாநிலங்களவையை சுமூகமாக நடத்த ஒத்துழைக்க வேண்டும்: துணை ஜனாதிபதி வேண்டுகோள்
புதுடெல்லி: துணை ஜனாதிபதியான சி.பி.ராதாகிருஷ்ணன், மாநிலங்களவை தலைவராகவும் செயல்படுவார். இந்நிலையில், அவர் துணை ஜனாதிபதியாக பதவியேற்ற பின், நாடாளுமன்ற வளாகத்தில் முதல் முறையாக நேற்று அவர் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்களை சந்தித்து பேசினார். இதில், இதில் அமைச்சர்கள் ஜே.பி. நட்டா, ராம்தாஸ் அதாவலே, அர்ஜுன் ராம் மேக்வால், எல்.முருகன், காங்கிரஸ் துணைத் தலைவர் பிரமோத் திவாரி, ஆகியோர் கலந்து கொண்டனர். மத்திய அமைச்சர் வும் கலந்து கொண்டனர்.
முன்னாள் பிரதமரும் ஜே.டி.எஸ் தலைவருமான எச்.டி. தேவகவுடா மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோர் உடல்நலக்குறைவு காரணமாக கலந்து கொள்ள முடியவில்லை. சுமார் 2 மணி நேரம் இந்த கூட்டம் நடந்தது. இதில் மாநிலங்களவையின் திறம்பட செயல்பாட்டை உறுதி செய்வதற்கான வழிகளைப் பற்றி சி.பி.ராதாகிருஷ்ணன் விவாதித்தார்.
பின்னர், சி.பி.ராதாகிருஷ்ணன் பேசுகையில், ‘அவை சுமூகமாக நடக்கவும், ஜனநாயகத்தை வலுப்படுத்துவும் அனைவரின் ஆதரவும், ஒத்துழைப்பும் தேவை. உரையாடல் மற்றும் விவாதம்தான் நாடாளுமன்றத்தின் அடிப்படை கொள்கைகள். பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளை முன் வைக்க பூஜ்ஜிய நேரம், சிறப்பு குறிப்புகள் மற்றும் கேள்வி நேரத்தை உறுப்பினர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். மாநிலங்களவையை கண்ணியம், ஒழுக்கம், புனிதத்துடன் நடத்த உறுப்பினர்கள் ஆதரவு தர வேண்டும்.
நாடாளுமன்ற விவாதத்திற்கான ‘லட்சுமண ரேகை’யை இந்திய அரசியலமைப்புச் சட்டமும் மாநிலங்களவையின் விதிப் புத்தகமும் தீர்மானித்துள்ளன. இந்தக் கட்டமைப்பிற்குள் அனைத்து உறுப்பினர்களின் உரிமைகளையும் நிலைநிறுத்துவதை உறுதி செய்ய வேண்டும். அவையில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நொடியும் ஜனநாயகத்தை வலுப்படுத்தப் பயன்படுத்தப்பட வேண்டும்.உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட அனைத்து பரிந்துரைகளும் உரிய முறையில் பரிசீலிக்கப்படும்’ என்றார்.