கூட்டணியில் சவாரி செய்யலாம் என நினைத்த கட்சி கலங்கிப்போய் நிற்பது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘கேமரா இருக்குது.. ஆனா பேக்அப் ஒரு வாரம்தான்.. என நடையா நடக்க வைக்கிறாங்களாமே காக்கிகள்..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் சிட்டியில திருட்டு அதிகரிச்சுகிட்டே இருக்குதாம்.. அதாவது, பைக், செல்போன் போன்ற திருட்டுகள் நடப்பதுல முதல் இடத்துல இருக்குது.. சிட்டியோட ஹாட் ஏரியாவாக இருக்குற நார்த் லிமிட்லதான், இந்த சம்பவங்கள் தொடர்கதையாக இருக்குது..
பைக், செல்போன் என்று பறிகொடுத்தவர்கள், காக்கிகள் நிலையத்துக்கு போனா, முதல்ல வண்டி திருட்டுப் போச்சா, போய் ஒழுங்கா தேடி பார்த்துட்டு வா? அப்படின்னு சொல்லி அனுப்பி வெச்சிடுறாங்களாம்.. அப்புறமாகத்தான் கேமரா பதிவுகளை பார்க்குறாங்களாம்.. பார்க்கும்போது, இவ்வளவு லேட்டா வந்தா எப்படிப்பா? கேமரா பேக்அப் ஒரு வாரத்துக்குத்தான் இருக்கும்னு சொல்லி நடையா, நடக்க வெக்குறாங்களாம்..
பொருளை பறிகொடுத்தவங்க, ஆதாரத்தோட போயி திருட்டு சம்பவத்தை காட்டினாலும் முகம் சரியா தெரியலையேன்னும், அது உன் வண்டிதானான்னு ஏதேதோ பேசி, அனுப்பிடுறாங்களாம்.. பாதிக்கப்பட்ட ஜனங்க அன்றைய தினக்கூலியும் போயி, வண்டியும் கிடைக்காம மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டிய நிலைதான் மிச்சமாம்.. இந்த புகார்களுக்கு எல்லாம், வழக்கு பதிவு செய்றதே இல்லையாம்.. இப்படி அந்த நார்த் லமிட் நிலையத்துக்கு புகார்கொடுக்க போற ஜனங்க புலம்பி தீர்க்குறாங்க..
மாவட்ட உயர் காக்கிகள் யாராவது அடிக்கடி ஸ்டேஷன் விசிட் அடிச்சாத்தான் ஏழை ஜனங்க நிலைமை வெளிச்சத்துக்கு வரும்னு பாதிக்கப்பட்டவங்களோட ஆதங்கம் கொஞ்சம் சத்தமாவே ஒலிக்கிறது கேட்கத் தொடங்கியிருக்குது..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘சேலத்துக்காரர் பிரசார வாகனத்தில் ஏற முயன்ற மலராத கட்சியின் மாநில நிர்வாகியை தடுத்து திருப்பி அனுப்பிட்டாங்களாமே தெரியுமா..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சிக்காரர் தனது தென் மாவட்ட சுற்றுப்பயணத்தை முடிக்கும் நேரத்தில் கோட்டையானவர் திடீர் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துட்டாரு.. இதனால், ரொம்பவே அப்செட் மனநிலையில் பூட்டு மாவட்ட பிரசாரத்தை நிறைவு செய்தாராம்.. கோட்டையானவரின் பின்புலத்தில் மலராத கட்சிக்காரங்க இருக்கிறார்களோ என இலைத்தலைவருக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறதாம்..
இதனால், தூங்கா நகர் மாவட்டம், ஹனி பீ மாவட்டம் மற்றும் பூட்டு மாவட்ட பிரசாரத்தில் எங்கேயும் கூட்டணி கட்சியினருக்கு எந்த முக்கியத்துவமும் தரவில்லை.. குறிப்பாக மலராத கட்சியினரை கண்டுகொள்ளக் கூட இல்லையாம்.. தூங்கா நகர பிரசாரத்தின் போது மலராத கட்சியின் மாநில நிர்வாகி சேலத்துக்காரரின் பிரசார வாகனத்தில் ஏற முயன்ற போது, இலைக்கட்சி நிர்வாகிகள் அவரை தடுத்து திருப்பி அனுப்பிட்டாங்களாம்..
அவரும் வெறுத்துப் போய் பிரசார இடத்தை விட்டே வெளிநடப்பு செய்துவிட்டாராம்.. இந்த தகவல் தென்மாவட்ட மலராத கட்சியினர் மத்தியில் வேகமாய் பரவியதுடன், கடும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளதாம்.. சேலத்துக்காரரின் நடவடிக்கை குறித்து மலராத கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் தங்கள் தலைமைக்கு புகார் மனு வாசித்துள்ளார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பிளஸ், மைனஸ் கேட்டு தெரிந்து அதற்கேற்ப மாஜி மாநில தலைவர் செக் வைப்பதால் மலராத கட்சி தேசிய பெண் நிர்வாகி கடும் அப்செட்டாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மான்ஸ்செஸ்டர் நகரில் மலராத கட்சியின் தேசிய நிர்வாகி சமீப நாட்களாக கடும் அப்செட்டில் இருக்கிறாராம்.. கட்சியில் அவருக்கான முக்கியத்துவம் திட்டமிட்டே நாளுக்கு நாள் குறைக்கப்பட்டு வருகிறதாம்.. தனக்கு ஆதரவாக இருக்கிற நிர்வாகிகளை தேர்வு செய்து அணி மாத்துகிற வேலையை மலராத கட்சியின் மாஜி தலைவர் கச்சிதமாக செய்திட்டு வருகிறாராம்.. அணி தாவும் நிர்வாகிகள் கிட்ட தேசிய நிர்வாகியின் பிளஸ், மைனஸ் எல்லாம் கேட்டு தெரிந்து கொண்டு அதற்கேற்ப செக் வைத்து வருகிறாராம்..
அதுல குறிப்பா விழாக்கள், நிகழ்ச்சிகளில் தேசிய நிர்வாகிக்கு முக்கியத்துவம் தருவதை தடுப்பதுதான் முதல் திட்டமாம்.. இனி எந்த விழாக்களுக்கும் தேசிய நிர்வாகியை அழைக்க கூடாதுன்னு மாஜி தலைவர் உத்தரவு போட்டிருக்கிறாராம்.. சமீபத்தில் மலராத கட்சி சார்பில் மான்செஸ்டர் நகரில் விநாயகர் சதுர்த்தி விழா நிகழ்ச்சிகள் நிறைய நடந்துச்சாம்.. இதில் ஒரு விழாவிற்கு கூட தேசிய நிர்வாகிக்கு அழைப்பு இல்லையாம்.. அனைத்து இடங்களிலும் மாஜி தலைவர் தான் முன்னிலைப்படுத்தப்பட்டாராம்.. இதை பார்த்து தேசிய நிர்வாகி நொந்து போய்விட்டாராம்..
எலக்சனுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், உட்கட்சி புறக்கணிப்புகள் தேசிய நிர்வாகிக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்குதாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கோபிக்காரரின் குரலை தொடர்ந்து, இன்னும் கலகக் குரல்கள் ஒலிக்கப் போகிறதாமே..’’ என்றார் பீட்டர் மாமா.‘‘தமிழ்நாட்டில் இன்னும் 6 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கு.. மலராத தேசிய கட்சியினர் சேலத்துக்காரரை மிரட்டி, உருட்டி கூட்டணிக்கு இணங்க வைத்து விட்டோம் என்ற மிதப்பில் இருக்காங்க..
சேலத்துக்காரரும் ஆதரவை திரட்டுகிறோம் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் போயிட்டு இருக்கிறாரு.. ஆனால் இலை கட்சியில் தற்போது பிரளயம் தான் வெடித்துள்ளது.. கோபிக்காரர் பிரிந்தவர்களை சேர்க்க வேண்டும் என ஆதரவுக் குரல் கொடுத்துள்ளதால், தென் மாவட்டத்தைச் சேர்ந்த தேனிக்காரர், குக்கர் காரரின் ஆதரவாளர்கள் பூரிப்பில் இருக்காங்களாம்.. சேலத்துக்காரரின் தலைமையை வீக் ஆக்கத்தான் இந்த ஏற்பாடாம்..
இதன் பின்னணியில் வலிமையான பெண்மணி உள்ளாராம்.. சேலத்துக்காரர் கட்சியை கைப்பற்றி விட்டோம் என்ற மமதையில் இருப்பதால், அதை உடைக்கத் தான் கோபிக்காரரை கையில் எடுத்துள்ளனராம்.. கோபிக்காரரின் குரலை தொடர்ந்து இன்னும் கலகக் குரல்கள் ஒலிக்குமாம்.. தேர்தல் வரும் நிலையில் கட்சி கலகலக்கிறதே என அல்வா, முத்து மாவட்டங்களில் இலைக்கட்சியினர் மட்டுமல்ல, கூட்டணி அமைத்து விட்டோம், சவாரி செய்யலாம் என நினைத்த மலராத தேசிய கட்சியினரும் கலங்கிப்போய்தான் நிற்கின்றனராம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.