தந்தையை மிஞ்சிய தனயன் இருக்க கூடாது; நான் சொல்லும் கூட்டணியே அமையும்: பூம்புகார் பாமக மகளிர் மாநாட்டில் ராமதாஸ் பரபரப்பு பேச்சு
சீர்காழி: தந்தையை மிஞ்சிய தனயன் இருக்க கூடாது. நான் சொல்லும் கூட்டணியே அமையும் என பூம்புகார் பாமக மகளிர் மாநாட்டில் ராமதாஸ் தெரிவித்து உள்ளார். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே பூம்புகாரில் பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் சார்பில் மகளிர் மாநாடு நேற்று மாலை நடந்தது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமை வகித்து பேசியதாவது: மாவீரன் குருவை எனது மூத்த மகன் என்று கூறுவேன். அவர் உயிருடன் இருந்தால் எப்படி மாநாட்டை நடத்துவாரோ அதேபோல் இந்த மாநாட்டை நடத்தி உள்ளீர்கள்.
பெண்ணாய் பிறப்பதற்கு மாதவம் செய்ய வேண்டும். இது கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை தெரிவித்தார். அந்த வகையில் பெண்களுக்கு பெருமை சேர்க்க இந்த மாநாடு, பெண்கள் அனைத்து வகையிலும் முன்னேற வேண்டும். பெண்ணுரிமை தொழிற்கல்வி பெண்களுக்கு பாதுகாப்பு அனைத்து வகையிலும் சரி பாதியாக இருக்கிறது. படிப்பில் பெண்கள் தான் முதன்மையாக இருக்கிறார்கள், ஆண்கள் பின்னால் தான் உள்ளனர். இதேபோல் தொழில் செய்வதிலும் பெண்கள் தான் முதன்மையாக உள்ளனர். பெண்கள் அனைத்து விதத்திலும் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். அனைத்து துறைகளிலும் பெண்கள் தான் முன்னேறி வருகின்றனர். இது மகிழ்ச்சி அளிக்கிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கண்காணிக்க வேண்டும். தமிழ்நாட்டில் கஞ்சா, மது என்ற தீமை ஒழிய வேண்டும். இந்த இரண்டு தீமைகளை, உங்கள் தெருவில் யார் விற்றாலும் பெண்கள், அவர்களை பிடித்து போலீசில் ஒப்படையுங்கள்.
சமீபத்தில் கங்கை கொண்ட சோழபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றிருந்தார். அப்போது அவர் தந்தையை மிஞ்சிய தனயன் இருக்க கூடாது என்பதற்காக சிறு உதாரணத்தை கூறியிருந்தார். இது மிகச்சரியான வார்த்தை. தஞ்சை பெரிய கோயிலை கட்டிய ராஜராஜ சோழனின் பெருமை குன்றிவிடக்கூடாது என்பதற்காக தனயனான ராஜேந்திர சோழன், கங்கை கொண்ட சோழபுரத்தில் தஞ்சை பெரிய கோயிலை விட உயரம் குறைவாக கோயிலை கட்டியிருந்தார். (அப்பொழுது கூட்டத்தில் இருந்து வாலிபர்கள் கைதட்டியதால் டென்ஷனான ராமதாஸ் கத்துபவர்கள் வாயில் இரண்டு அடி அடியுங்கள் என்றார்). 2026ல் வெற்றி கூட்டணி அமைக்கப்படும். அமைப்பேன்... அமைப்பேன்.... அமைப்பேன். மூன்று முறை இதை உறுதியாக கூறுகிறேன். யார் என்ன சொன்னாலும் அதனை காதில் வாங்காதீர்கள். நான் சொல்வதுதான் நடக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
20% ஒதுக்கீடு தந்தவர் அருமை நண்பர் கலைஞர்;
ராமதாஸ் பேசுகையில், ‘சாதிவாரி கணக்கெடுப்பு நமது தமிழக முதல்வர் செய்ய வேண்டும். உடனடியாக செய்ய வேண்டும் என இந்த நேரத்தில் அவருக்கு கோரிக்கை விடுக்கிறேன். மிகப்பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதம் ஒதுக்கீடு தந்தவர், அருமை நண்பர் கலைஞர்.
இதனால் 108 சமுதாயங்கள் பயன்பெற்றனர். நீங்கள் தந்தையை மிஞ்சிய தனயனாக இருந்து இதை ஏன் செய்யக்கூடாது. பல மாநிலங்கள் ஜாதிவாரி கணக்கிடத்தை எடுத்துள்ளனர். ஜாதி வாரி கணக்கெடுப்பை எடுத்த வரலாற்றில் நீங்கள் இடம் பிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். 10.5 சதவீதத்துக்காக தமிழகமே அதிரும் வகையில் பல போராட்டங்கள் செய்யப்பட்டது. அதையும் தாண்டி செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.
நாங்கள் அப்படிப்பட்ட போராட்டத்தை செய்தால் தமிழ்நாடு தாங்காது. அதனால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை நாங்கள் உணர்வோம். எனவே ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என நீங்கள் அறிவிப்பீர்கள் என எதிர்பார்க்கிறோம்’ என்றார்.
மொத்த பணத்தையும் எடுத்து சென்ற அன்புமணி:ராமதாஸ் குற்றச்சாட்டால் பரபரப்பு
மேடையில் பாமக மாநில துணை தலைவர் சுப்பிரமணிய ஐயர் பேசுகையில், ‘வரும் தேர்தலில் அய்யா கூறும் வேட்பாளர்களுக்கு அவர் கூறும் சின்னத்தில் ஓட்டு போட்டால் 40 இடங்களில் நாம் ஜெயிக்கலாம். இப்போது அய்யாவிடம் அவ்வளவாக பணம் இல்லை. அதனால் நாம் ஒவ்வொரு குடும்பத்தை சேர்ந்தவர்களும் ரூ.10, ரூ.10 ஆக சேர்த்து பொதுக்குழுவின் போது ஐயாவிடம் கொடுக்க வேண்டும்’ என்றார். அப்போது இடைமறித்த ராமதாஸ், ‘அவ்வளவாக என்று சொல்லாதீர்கள். உங்களுக்கு தான் தெரியுமே, மொத்தமாக எடுத்து சென்று விட்டனர். அதனால் ஒன்றுமே இல்லை என்று சொல்லுங்கள்’ என்று அன்புமணியை மறைமுகமாக கூறினார். இதைக்கேட்டு அந்த நிர்வாகியும், ஆமாம் அனைத்தையும் எடுத்து சென்று விட்டனர். ஐயாவிடம் இப்போது ஒன்றுமே இல்லை என்று கூறினார். எனக்கு ஒன்றும் கொடுக்க வேண்டாம், அனைவரும் ஓட்டு மட்டும் போடுங்கள் என்று ராமதாஸ் கேட்டுக்கொண்டார்.
யாருடன் கூட்டணி? 17ம் தேதி தெரியும்
மாநாட்டு நிகழ்ச்சிகளை முடிந்துக்கொண்டு ராமதாஸ் சென்னைக்கு புறப்பட்டு செல்வதற்காக காரில் ஏற வந்தார். அப்போது நிருபர்கள் அவரிடம், ‘2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைப்பீர்களா?’ என்று கேட்டனர். அதற்கு ராமதாஸ், வரும் 17ம்தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றுவோம். அப்போது அந்த கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டு முடிவு செய்வோம். இப்போது எதுவும் சொல்ல முடியாது’ என்றார்.