கூட்டணியில் இருந்து வெளியேறிய ஓபிஎஸ்சுக்கு பாஜ திடீர் அழைப்பு: தேசிய அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷை நேரில் சந்திக்க வலியுறுத்தல்
சென்னை: கூட்டணியில் இருந்து வெளியேறிய ஓபிஎஸ்சுக்கு பாஜ நேற்று திடீர் அழைப்பு விடுத்துள்ளது. இன்று சென்னை வரும் பாஜ தேசிய அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷை நேரில் சந்திக்க வருமாறு தொலைபேசியில் வலியுறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி 2 முறை தமிழகம் வந்த போதும் ஓபிஎஸ்சுக்கு அனுமதி மறுக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பாஜ கூட்டணியில் இருந்து விலகுவதாக கடந்த ஜூலை 31ம் தேதி ஓபிஎஸ் அதிரடியாக அறிவித்தார்.
முன்னதாக அன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அடையாறு தியாசபிக்கல் சொசைட்டி பார்க்கில் வாக்கிங் சென்ற போது, ஓபிஎஸ் அவரை சந்தித்து பேசினார். தொடர்ந்து அன்று மாலையே முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் ஓபிஎஸ் சந்தித்து பேசினார். பாஜவுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, ஓபிஎஸ் சந்தித்து பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.
இந்நிலையில் பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், என்னிடம் சொல்லி இருந்தால் பிரதமரை சந்திக்கும் வாய்ப்பை ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஏற்படுத்திக் கொடுத்திருப்பேன் என தெரிவித்து இருந்தார். இதனை ஏற்க மறுத்த ஓ.பன்னீர்செல்வம், நயினார் நாகேந்திரனை 6 முறை தொலைபேசியில் அழைத்தும், எனது அழைப்பை அவர் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். இதற்கு ஓபிஎஸ் ஆதாரத்துடன் நயினாருக்கு அனுப்பிய எஸ்எம்எஸை வெளியிட்டார். தொடர்ந்து அதிமுக, பாஜ தொடர்பாக பரபரப்பு அறிக்கையையும் ஓபிஎஸ் வெளியிட்டார்.
அதாவது, அதிமுகவை அழிவுப் பாதையில் அழைத்துச் செல்லப்படுவதை மக்களுக்கு எடுத்து காட்ட பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும். தமிழ்நாட்டிற்கு எதிரான ஒன்றிய பாஜ அரசின் செயல்பாடுகளை மக்களிடம் எடுத்துச் சொல்லப்படும் என்றும் அதிரடியாக அறிவித்தார். இந்நிலையில் தென் மாவட்டங்களில் உள்ள முக்குலத்தோர் வாக்குகளை கவருவதற்காக, ஓபிஎஸ்சை சமாதானப்படுத்த பாஜவினர் முயற்சி செய்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் பாஜ தேசிய அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷ் சென்னை தி.நகரில் உள்ள பாஜ அலுவலகத்தில் இன்று நடைபெறும் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வர உள்ளார். எனவே, பி.எல்.சந்தோஷை சந்திக்க வருமாறு பாஜ சார்பில் ஓபிஎஸ்சுக்கு செல்போன் வாயிலாக அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அழைப்பை ஏற்று பெரியகுளத்தில் உள்ள ஓபிஎஸ் சென்னை வர உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை வரும் அவர் பி.எல்.சந்தோஷை சந்திப்பாரா அல்லது பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறிய முடிவில் உறுதியாக இருப்பாரா என்ற ேகள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து பாஜ வட்டாரத்தில் கேட்ட போது, பி.எல்.சந்தோஷ் முழுக்க முழுக்க பாஜ நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க தான் வருகிறார். காலை முதல் மாலை வரை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது என்று தெரிவித்தனர். ஓபிஎஸ் சந்திப்பு குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் பிரதமர் மோடி வரும் 27ம் தேதி மீண்டும் தமிழகம் வர உள்ளார். அப்போது ஓபிஎஸ்சை சந்திக்க வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.