கூட்டணி கூட தெரியாத எடப்பாடி: ராஜபாளையம் பிரசாரத்தில் காமெடி
ராஜபாளையம்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரசார பயணத்தை தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வருகிறார். நேற்றி மாலை 4 மணிக்கு ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் காமராஜர் சிலை அருகில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: திமுக தலைமையில் அங்கம் வகிக்கின்ற கூட்டணி கட்சி தலைவர்கள், பாஜவிற்கும் உங்களுக்கும் என்ன கொள்கை என்று கேட்கிறார்கள்.
கேரளாவில் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் ஒரே கொள்கையாக இருக்கிறதா? மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, கம்யூனிஸ்ட் கட்சி ஒரே கொள்கையுடன் கூட்டணியா? இது எல்லாம் வைத்துக்கொண்டு வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுகவை அவதூறாக விமர்சித்தால் எங்கள் கட்சியினுடைய நிர்வாகிகள் ராஜேந்திரபாலாஜி போன்ற அற்புதமாக பேசக்கூடியவர்கள் உங்களுக்கு பதில் கொடுப்பார்கள். கொள்கை வைத்துள்ள காரணத்தினால் தான் எங்கள் கட்சியை அசைக்க முடியவில்லை.
கொள்கை வேறு கூட்டணி வேறு. இதுதான் அதிமுக நிலைப்பாடு. இவ்வாறு அவர் பேசினார். யார் யாருடன் கூட்டணி என்று கூட தெரியாமல் எடப்பாடி பேசியது சிரிப்பலையை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் காங்கிரஸ் - கம்யூனிஸ்ட், மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி - கம்யூனிஸ்ட் எதிரெதிர் கட்சிகளாக உள்ளன. இவர்கள் கூட்டணி அமைத்ததே இல்லை. இதை கூட தெரியாமல் எதற்கு தலைவா இங்கு பேசுகிறீர்கள், குழப்புறீங்களே என்று தொண்டர்கள் புலம்பினர்.
* கருப்புக்கொடி காட்ட முயற்சி
எடப்பாடி பழனிசாமி ராஜபாளையம் ஓட்டலில் இருந்து புறப்பட்டு வரும் வழியில் பூலித்தேவன் மக்கள் முன்னேற்ற இயக்க மாவட்ட செயலாளர் அய்யனார் தலைமையில், வன்னியருக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தை கண்டித்து, கருப்புக்கொடி காட்டுவதற்காக சிலர் காத்திருந்தனர். அவர்களை போலீசார் உடனடியாக அப்புறப்படுத்தினர்.