‘வாழ்வா, சாவா’ என்ற நிலை கூட்டணிக்காக கையேந்தும் நிலை அதிமுகவிற்கு ஏற்பட்டு இருக்கிறது: ஓபிஎஸ் குற்றச்சாட்டு
சென்னை : கூட்டணிக்காக கையேந்த வேண்டிய நிலை தற்போது அதிமுகவிற்கு ஏற்பட்டு இருக்கிறது என முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கூட்டணிக் கட்சிகள் அதிமுகவை நோக்கி வந்த நிலை மாறி, கூட்டணிக்காக கையேந்த வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டதற்கு காரணம் அதிமுக பல அணிகளாக பிளவுபட்டு இருப்பதுதான்.
இந்த நிலைமை நீடித்தால் வருகின்ற 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் தோல்வியை சந்திப்பது மட்டுமல்லாமல் மூன்றாவது இடத்திற்கு தள்ளக்கூடிய நிலைமை கழகத்திற்கு உருவாகும். இப்பொழுது வெற்றி பெறவில்லை என்றால் எப்பொழுதும் வெற்றி இல்லை என்பதுதான் கள யதார்த்தம். வெற்றிக் கனி என்பது எட்டாக் கனியாகிவிட்டது.
‘வாழ்வா, சாவா’ என்ற நிலைக்கு கழகம் தற்போது தள்ளப்பட்டு இருக்கிறது. ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்பதை மனதில் நிலைநிறுத்தி, எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்டு, ஜெயலலிதாவால் கட்டிக் காக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வருகிற 2026ம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெற்றி பெறும் வகையில், பிரிந்து கிடக்கும் அனைத்து அணிகளும் ஒன்றிணைந்து செயல்பட நாம் அனைவரும் இந்த நாளில் உறுதியேற்போம்.