‘வாழ்வா, சாவா’ என்ற நிலை; கூட்டணிக்காக கையேந்தும் அதிமுக: ஓபிஎஸ் குற்றச்சாட்டு
சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் வெளியிட்ட அறிக்கை: ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஒவ்வொரு தேர்தலிலும் அதிமுக தோல்வி அடைந்து வருகிறது. வெற்றி, தோல்வி என்பது மாறி, மாறி வருவது சகஜம். கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடர் தோல்வியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஆர்.கே நகர் இடைத் தேர்தல் தோல்வி, 2019ம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தோல்வி, அதே ஆண்டு சட்டமன்ற இடைத் தேர்தல் தோல்வி, ஊரக உள்ளாட்சித் தேர்தல் தோல்வி, 2021ம் ஆண்டு சட்டமன்றப் பேரவைத் தேர்தல் தோல்வி, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புத் தேர்தல் தோல்வி, ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் தோல்வி, 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தோல்வி என தொடர் தோல்விகள். இது தவிர, விக்கிரவாண்டி மற்றும் ஈரோடு கிழக்கு இரண்டாவது இடைத் தேர்தல்களில் நிற்கவே முடியாத அவல நிலை. இதற்கு காரணம், சர்வாதிகாரத்தை அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் நிராகரித்துவிட்டார்கள்.
வெறும் அடையாள அட்டையை வைத்துக் கொண்டு வீர வசனம் பேசுவது வெற்றிக்கு வழி வகுக்காது. 2014ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை பொதுத் தேர்தலில் அதிமுக தனித்து நின்று கிட்டத்தட்ட 45 விழுக்காடு வாக்குகளை அள்ளி 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 2024ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வெறும் 19.29 விழுக்காடு வாக்குகளைப் பெற்று ஓர் இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. கிட்டத்தட்ட 26 விழுக்காடு வாக்குகளை இழந்துவிட்டது. ஏழு இடங்களில் வைப்புத் தொகையை இழந்ததோடு, 12 தொகுதிகளில் மூன்றாவது இடத்திற்கும், ஒரு தொகுதியில் நான்காவது இடத்திற்கும் தள்ளப்பட்டது.
கூட்டணிக் கட்சிகள் கழகத்தை நோக்கி வந்த நிலை மாறி, கூட்டணிக்காக கையேந்த வேண்டிய நிலை தற்போது அதிமுகவிற்கு ஏற்பட்டு இருக்கிறது. இதற்கு காரணம், அதிமுக பல அணிகளாக பிளவுபட்டு இருப்பதுதான். இந்த நிலைமை நீடித்தால் வருகின்ற 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் தோல்வியை சந்திப்பது மட்டுமல்லாமல் மூன்றாவது இடத்திற்கு தள்ளக்கூடிய நிலைமை உருவாகும். இப்பொழுது வெற்றி பெறவில்லை என்றால் எப்பொழுதும் வெற்றி இல்லை என்பதுதான் கள யதார்த்தம். வெற்றிக் கனி என்பது எட்டாக் கனியாகிவிட்டது. ‘வாழ்வா, சாவா’ என்ற நிலைக்கு அதிமுக தற்போது தள்ளப்பட்டு இருக்கிறது.
‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்பதை மனதில் நிலைநிறுத்தி, 2026ம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெற்றி பெறும் வகையில், பிரிந்து கிடக்கும் அனைத்து அணிகளும் ஒன்றிணைந்து செயல்பட நாம் அனைவரும் இந்த நாளில் உறுதியேற்போம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.