பாஜவுடன் சேர்ந்து போராட்டமா செஞ்சோம்? ‘கூட்டணி தோளில் போட்ட துண்டு எப்ப வேணும்னாலும் எடுப்போம்...’செல்லூர் ராஜூ ‘தில்’
மதுரை: கூட்டணி தோளில் போட்ட துண்டு மாதிரி, எப்ப வேண்டுமானாலும் எடுப்போமென செல்லூர் ராஜூ பேட்டி அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரையில் நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம், நிருபர்கள், ‘‘அதிமுக ஆட்சிக்கு வரும் என்று நீங்கள் சொல்கிறீர்கள். உங்களிடமிருந்து வெளியே வந்தவர்கள் ஆட்சி அமைப்போம் என்கின்றனரே?. செங்கோட்டையன் உள்ளிட்டோர் வெளியேறி விட்டனரே?’’ என்றனர். இதற்கு பதிலளித்து செல்லூர் ராஜூ கூறியதாவது:
அதிமுகவில் இருந்து தனிமனிதன் வெளியே செல்வதால் எந்தவொரு பாதிப்புமில்லை. செங்கோட்டையன் போனது அதிமுக என்கிற ஆலமரத்தில் ஒரு இலை உதிர்வது போலத்தான். பழுத்த இலை கீழே விழுவதால் ஆலமரம் சாய்ந்து விட்டது என அர்த்தமில்லை. எம்ஜிஆர் காலத்தில் இருந்தவர் என்று சொல்லிக்கொண்டு இருந்தால் போதுமா? இரட்டை இலை, கட்சி அலுவலகம், கட்சிக் கொடி எல்லாமும் இருக்கிறது. அவர் எம்எல்ஏவாக, அமைச்சராக இருந்தார். செங்கோட்டையனுக்காக மக்கள் ஓட்டு போடவில்லை, இரட்டை இலைக்காக, அதிமுகவுக்காக தான் மக்கள் ஓட்டு போட்டார்கள்.
மதுரையில் இந்துக்கள், இஸ்லாமியர்கள் அண்ணன், தம்பிகளாக வாழ்கிறோம். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கைதான பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை அதிமுக சார்பில் எம்எல்ஏ, ராஜன் செல்லப்பா சென்று சந்தித்தது, மனிதாபிமான அடிப்படையில் தான். கொலை வழக்காக இருந்தாலும் நண்பரை போய் பார்ப்பதில்லையா? நட்பின் அடிப்படையில் தான் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பாஜவுக்கு ஆதரவு தெரிவித்தோம்.
நாங்களெல்லாம் போனோமா? நாங்கள் என்ன பாஜவுடன் சேர்ந்து திருப்பரங்குன்றம் விவகாரத்துக்காக ஆர்ப்பாட்டம், போராட்டம் செய்தோமா? இல்லையே. கூட்டணி என்பது தோளில் போடப்பட்ட துண்டு. எப்போது வேண்டுமானாலும் எடுத்து விடலாம். கூட்டணியில் இருந்தாலும் கொள்கை தனித்தனியாக இருக்கும். தேர்தலில் பார்ட்னராக இருப்போம். எந்த நிலைமை வந்தாலும் நான் அதிமுக வேட்டியை மாற்ற மாட்டேன். இவ்வாறு கூறினார்.
* மக்கள் மனதில் முதல்வர் மு.க.ஸ்டாலின்: செல்லூர் ராஜூ பாராட்டு
செல்லூர் ராஜூ கூறுகையில், ‘‘எப்போதுமே மக்கள்தான் எஜமான். மக்கள் மனதில் இரண்டே பேர்கள்தான் உள்ளனர். ஒருவர் முதலமைச்சரான மு.க.ஸ்டாலின், மற்றொருவர் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி. இவர்கள் இருவரைத்தான் மக்கள் பார்ப்பார்கள். புதிதாக வருபவர்களுக்கு காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சுதான். அவர்கள் தங்களை, நாங்கள் பத்தோடு பதினொன்று என்று சொல்வார்களா? நாங்கதான் ஆட்சி அமைப்போம்னுதானே சொல்வார்கள். மதுரை மேலமடை பாலத்திற்கு வேலுநாச்சியார் பாலம்னு பெயரிட்டது நல்லதுதான்’’ என்றார்.