கூட்டணியை பொறுத்தவரை அதிமுகவில் நான், பாஜகவில் அமித்ஷா கூறுவது தான் இறுதி: எடப்பாடி பழனிசாமி பேட்டி
சென்னை: டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து பேசியது குறித்து எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். அதில், என்னுடைய டெல்லி பயணம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வந்துள்ளன. அனைவரிடமும் சொல்லிவிட்டே அமித்ஷாவை சந்திக்க டெல்லி சென்றேன். டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் இருந்து அரசு வாகனத்தில்தான் சென்றேன். அமித் ஷா வீட்டில் இருந்து வெளியே வந்தபோது கர்சீப்பை எடுத்து முகத்தை துடைத்தேன். முகத்தை துடைத்ததில் என்ன அரசியல் உள்ளது. முகத்தை துடைத்ததை வீடியோ எடுத்து அதை வெளியிடுவதா என்று எடப்பாடி கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லியில் நட்சத்திர ஓட்டலில் இருந்தே அமித்ஷா வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார் எடப்பாடி. ஆனால் தற்போது தமிழ்நாடு இல்லத்தில் இருந்து புறப்பட்டு சென்றதாக எடப்பாடி பேட்டி அளித்து வருகிறார். அமித்ஷா வீட்டுக்கு செல்லும்போது அரசு வாகனத்தில் சென்ற எடப்பாடி, தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான காரில் வெளியே வந்தார்.
அமித் ஷா வீட்டில் இருந்து வெளியே வந்த கார் பற்றி எடப்பாடி பழனிசாமி எதுவும் கூறவில்லை. கார் இல்லாததால் கிடைத்த காரில் ஏறி சென்றேன். உடன்வந்த தொழிலதிபர் யார் என கூறாமல் எடப்பாடி பழனிசாமி மழுப்பியுள்ளார். தொழிலதிபருடன் வெளியே வந்தது ஏன் என்ற கேள்விக்கு அந்த யூகம் உங்களுக்கு ஏன் என்று எடப்பாடி பதில் அளித்துள்ளார்.
அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து அமித் ஷாவிடம் பேசவில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். தனது எழுச்சி பயணம் சிறப்பாக இருந்ததாக அமித் ஷா பாராட்டினார். அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிட மாட்டேன் என அமித் ஷா ஏற்கெனவே தெளிவாக கூறிவிட்டார். முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என வலியுறுத்தவே அமித் ஷாவை சந்தித்தேன்.
டிடிவி தினகரன் திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளார். ஜெயலலிதாவால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டவர் டிடிவி தினகரன். நான் முகமூடி அணியவில்லை, டிடிவி தினகரன் தான் முகமூடி அணிந்து அதிமுகவிற்குள் நுழைந்தார்.
கூட்டணியை பொறுத்தவரை அதிமுகவில் நான், பாஜகவில் அமித்ஷா கூறுவது தான் இறுதி. அரசியல் சூழ்நிலைக்கு ஏற்பவே கூட்டணி அமைக்க இயலும். கட்சி கட்டுப்பாட்டை யார் மீறினாலும் நடவடிக்கை எடுக்கப்படும். செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்குவது பற்றி கட்சி தலைமை முடிவு செய்யும் என்று பேட்டி அளித்துள்ளார்.