கணவனின் மரண வழக்கில் மனைவிக்கு விடுதலை; ‘போய் சாவு’ எனக் கூறுவது தற்கொலை தூண்டுதலாகாது: அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
அலகாபாத்: திருமண வாழ்வில் ஏற்படும் தகராறுகள் மற்றும் சித்திரவதைகள், தற்கொலைக்குத் தூண்டும் குறிப்பிட்ட நோக்கம் இல்லாதபட்சத்தில், குற்றமாக கருத முடியாது என அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குஜராத்தில் பிரிந்து வாழ்ந்த கணவர் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், அவரது மனைவி மற்றும் மாமனார், மாமியார் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 306ன் கீழ் தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி அவர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்து, அவர்கள் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து மூவரும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து, மூவரையும் வழக்கில் இருந்து விடுவித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சமீர் ஜெயின் தனது தீர்ப்பில் பல முக்கிய கருத்துக்களைக் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறும்போது, ‘தற்கொலைக்குத் தூண்டுதல் குற்றச்சாட்டை நிரூபிக்க, குற்றம் சாட்டப்பட்டவருக்கு தற்கொலையைத் தூண்டும் எண்ணம் அல்லது உள்நோக்கம் இருந்ததை அரசுத் தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.
மேலும், ‘திருமண வாழ்வில் ஏற்படும் சண்டைகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் இயல்பானவை. அவற்றை மட்டும் வைத்துக்கொண்டு தற்கொலைக்குத் தூண்டியதாகக் கருத முடியாது’ எனவும், ‘கோபத்தின் உச்சத்தில் ஒருவரை ‘போய் செத்துப்போ’ என்று கூறுவது போன்ற வார்த்தைகள், சட்டப்படி தற்கொலைத் தூண்டுதலாகாது. அத்தகைய வார்த்தைகள் குற்றவியல் உள்நோக்கத்தைக் காட்டுவதில்லை’ என்றும் நீதிபதி குறிப்பிட்டார். குற்றம் சாட்டப்பட்டவர்களின் செயலால், இறந்தவருக்கு தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையை உருவாக்கியதற்கான ஆதாரம் இல்லாததால், இந்த வழக்கு ரத்து செய்யப்படுவதாக தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.